அஞ்சனம் அழகியபிள்ளை ஒரு சொந்த வீடு வாங்குகிறார். அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு எலியும், ஒரு மான்ஸ்டரும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். எலியும், மான்ஸ்டரும் ஏன் எதற்கு அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர் என்பதும், அதிலிருந்து அஞ்சனம் அழகியபிள்ளை எப்படித் தப்பிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.
ஒருவழியாக, எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகுமளவு ஒரு நல்ல குழந்தைகள் படம், ஆச்சரியமாகத் தமிழில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுட்டீஸ், குட்டீஸ்களுக்கு ஏற்றதொரு படமாக மட்டும் அல்லாமல், பெரியவர்களும் ரசித்து மகிழும்படியான படமாகவும் உள்ளது.
அஞ்சனம் அழகியபிள்ளை, பெண் பார்ப்பதற்காக மேகலா வீட்டிற்குச் செல்கிறார். மேகலாவாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கதைக்கு உதவாத கதாபாத்திரம் எனினும் நிறைவாகத் தோன்றியுள்ளார் படத்தில். எஸ்.ஜே.சூர்யாவும், எலியும் தான் பிரதான பாத்திரங்கள் என்றாலும் நாயகிக்கு அளிக்கப்பட்டுள்ள அந்த டீசன்ட்டான ஆசுவாசமளிக்கும் ஸ்பேஸை மிஸ்டர் லோக்கல் கண்டு நொந்தவர்களால் தான் முழுமையாக உணரமுடியும்.
எலி சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள், கச்சிதமாய் கதையோடு பொருந்துகின்றன. எலிக்குத் தரப்படும் இன்ட்ரோடக்ஷன், அதன் பதைபதைப்பு, வீட்டை இரண்டாக்கும் தாண்டவம் என அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன. கருணாமூர்த்தியான அஞ்சனம் அழகியபிள்ளையை ருத்ரமூர்த்தியாக எலி மாற்றுகிறது. நாயகனாக எஸ்.ஜே.சூர்யா கொள்ளை கொள்கிறார். அஞ்சனம் அழகியபிள்ளை எவ்வளவு அழகான பெயர்?கொஞ்சம் பிசகினாலும் படம் மிக அமெச்சூராக வந்திருக்கும். இயக்குநர் மீது எஸ்.ஜே.சூர்யா வைத்த நம்பிக்கையை முழுவதுமாகக் காப்பாற்றியுள்ளார் நெல்சன் வெங்கடேசன். சாபு ஜோசப்பின் எடிட்டிங்கால், மிக நேர்த்தியான படமாக வந்துள்ளது மான்ஸ்டர்.
பேராசையில் சக உயிரைக் கொல்லத் துடிக்கும் அசுரனாக அனில்குமார் நடித்துள்ளார். எலியைப் பிடிக்க அவர் அழைத்து வரும் மனிதரின் வியூகங்களும் பேச்சுகளும் வெகு சுவாரசியமாக உள்ளன. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் போல் காட்டப்படும் அந்த நபரின் எளிமையான தொழில்நுட்ப அறிவும், ஆங்கிலச் சொற்பிரயோகங்களும் ரசிக்க வைக்கின்றன. கதாபாத்திர வார்ப்பிலும் தேர்விலுமே பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறார் இயக்குநர்.
நாயகனின் நண்பர் ரவியாகக் கருணாகரன் நடித்துள்ளார். இயக்குநர் அனைவரையும் இழுத்துப் பிடித்து, ஓவர்-போர்டாகச் செல்லாமல் படத்திற்குத் தேவையான அளவு நடிப்பை வாங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாயும், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனிம் காட்சிகளின் தரத்தையும் அழகியலையும் மேம்படுத்த உதவியுள்ளனர். சினிமா எனும் பல்லூடகத்தின், இயக்குநர் நெல்சன் வெங்கடேசனிற்கு இருக்கும் புரிதலும், கன்ட்ரோலும் தான் படத்தின் பலம்.
படத்தின் தொடக்கமே மிக அற்புதமாய் உள்ளது. சக உயிர்களைக் கொல்லக் கூடாது என்று வள்ளலார் முன்மொழிந்த ஜீவகாருண்யத்துடன் படம் தொடங்குகிறது. முடிவதும் அப்படியே! நாயகன் வள்ளலாரை வழிபடுபவன் என்பதை வெறும் புறச்சடங்காக மட்டும் வைக்காமல், கதையோடு ஒரு சிறு இழையாகத் தொடர வைத்து அசத்துகின்றனர். நாயை மாடியில் இருந்து தூக்கிப் போட்டு வீடியோ எடுத்துப் பகிரும் கொடூரத்தைப் பொழுதுபோக்காகச் செய்யும் தலைமுறைக்கு, இது போன்ற படங்களின் வரவு மிகவும் அவசியம்.