Shadow

முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

Mahendran - mullum malarum

மகேந்திரனுக்குப் புனைவுகளைப் பற்றிய நுண்மையானதொரு புரிதல் இருந்தது. அதைப் பார்வையாளனை உள்ளிழுக்கும் விதமாகத் திரைமொழியாக மாற்றும் வித்தை இயல்பாக அமைந்திருந்தது.

புதுமைப்பித்தனிடமிருந்து அவர் உந்துதல் பெற்று உதிரிபூக்கள் எழுதினார் என்பது ஒன்றே அவருடைய படைப்பூக்கத்தின் மேன்மைக்கு சான்று. உதிரி பூக்கள் தமிழ் சினிமாவிற்கான அடையாளத்தில் ஒன்று.

அவருக்கு மிகச் சிறப்பான திரைமொழி ஞானம் இருந்தது. அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது.

‪‘முள்ளும் மலரும்’ குறுநாவலாக பரிசு பெற்ற படைப்பு. ஆனால் மகேந்திரனின் திரைக்கதை அமைப்பில் அது இன்னமும் சில உச்சங்களைக் கண்டது. ‬

காளிக்குத் தன்னுடைய மேலதிகாரி மீது தீராத எரிச்சல். அவர் பேசும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அவனுடைய சாதாரண வாழ்க்கையைக் குறையுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் அந்த அதிகாரியும் காளியின் தங்கையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்ப்புக் கொள்கிறார்கள்.

இதை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு காதல் ஜோடியும் அதற்கு வில்லனாகக் காளி இருப்பதும் போலத்தான் இருக்கும். உமா சந்திரன் தன்னுடைய எழுத்தில் இதை நன்றாக பேலன்ஸ் செய்திருந்தாலும், அதைத் திரையில் கொண்டு வந்ததில் மகேந்திரன் அபார வெற்றி கண்டிருப்பார். மூன்று காட்சிகளை முக்கியமாகச் சொல்லலாம்.

ஆஃபிசர் காளியிடம் அவன் தங்கை வள்ளியைப் பெண் கேட்டு வருவார். காளிக்கு அதிர்ச்சியாக இருக்கும். மறுநாள் காலை கூட்டுசந்திற்கு அவரை வரச் சொல்வான். அங்கே ஊரார் முன்னிலையில் தங்கைக்கு வேறொருவனை மணம் பேசி முடிப்பான்.

காளியின் சிந்தனையோட்டம் பற்றிய எந்த வசனமுமோ, பின்னணி விளக்கமோ இருக்காது. ரஜினிகாந்தின் மிக அழுத்தமான முக பாவனையில் ஆஃபிசர் மீதிருககும் மன விலக்கமும், தன் ஊரார் மீதான அவன் நம்பிக்கையும் வெளிப்படும். இத்தனைக்கும் காளி தன் தங்கைக்கு மணம் பேசி முடித்த அந்த மளிகைக் கடைக்காரன் வேறொரு உறவில் இருப்பவன் என ஊருக்கே தெரியும். ஆனாலும் காளிக்கு லா பாய்ண்ட் பேசும் ஆஃபிசரை விட அவன் ஊர்க்காரன் நம்பிக்கைக்கு உரியவன் ஆகிறான்.

மங்கா, ‘ஆபிஃசரிடம் வள்ளியைக் கூட்டிக்கொண்டு போய் விடுங்கள். காளியின் வீம்பான முடிவால் அவள் வாழ்வு சீரழிந்து போய்விடும்’ என்பாள். ஆஃபிசர், ‘அது சரியல்ல’ என நியாயம் பேசுவார். ‘வள்ளியின் மனதில் ஆசையை விதைத்துவிட்டு, இப்பொழுது அது நிறைவேறாமல் போவதற்கு நியாயம் பேசுவது கோழைத்தனம்’ என அவரைச் சாடுவாள்.

மூன்றாவது காட்சியில், ஊரே கூடி தனது விருப்பத்திற்கு எதிராக தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முயல, காளி கையாலாகாது (ஒற்றைக் கைதான்) பார்த்துக் கொண்டிருக்க, வள்ளி அவனிடமே மீண்டும் ஓடிவருவாள். அந்த ஒரு கணத்தைப் பயன்படுத்தி தன் பெருமையை மீட்டுக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பான் காளி.

அந்த பவர் ஸ்டேஷனை ஒட்டிய சிறிய மலைக்கிராமத்தினரின் வாழ்க்கையைப் பக்கம் பக்கமாக எழுத்தில் கொண்டு வந்தது நாவல் என்றால், அதை எவ்வித மிகைப்படுத்துதலோ தட்டையாக்குதலோ இல்லாமல் உயிர்ப்போடு, அதே நுணுக்கங்களோடு நமக்கு காட்சிப்படுத்தியவர் மகேந்திரன்.

தொடக்கத்திலேயே உயரங்களை எட்டிய படைப்பாளிகள் அந்த உச்சங்களை மீண்டும் எட்ட முடியாது தடுமாறுவதும் உண்டு. மகேந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.

– ஸ்ரீதர் நாராயணன்