விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர விரும்பும் இளையராஜா ரசிகரான வெங்கட் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகரான ஆனந்தினை சந்திக்கிறார். ஆனந்த் தன் வாழ்க்கையைக் குறித்தும், நண்பர்களைக் குறித்தும் வெங்கட் பிரபுவிடம் பகிர்வதுதான் படத்தின் கதை.
சின்னச் சின்ன ஆசை, குட்டிச்சுவர் ஏறி, கல்லூரிச் சாலை, தனிமை தனிமையோ, Take it ஊர்வசி, வான் இங்கே நீலம் அங்கே, எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த பாடலின் வரிகளை அத்தியாயங்களுக்கான உப தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். IV Trip – ஏலகிரி என நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு மட்டுமே இதில் விதிவிலக்கு. தலைப்பில் தான் தமிழ்த் திரைத்துறை சென்ட்டிமென்ட் பார்த்து ஒற்று தவிர்ப்பார்கள். இப்படத்தில் உப தலைப்புகளிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆனந்த், ஆனந்தம் காலனியில் குடியேறி நண்பர்களைச் சம்பாதித்து மகிழ்ச்சியாகக் கல்லூரியை முடித்துவிடுகிறான். அதுவரை கலகலப்பாகச் செல்லும் படம், வேலைக்குச் செல்லாததால் ஆனந்த் வீட்டில், வெளியில், நண்பர்களிடத்தில் எதிர்கொள்ளும் அவமானத்தில் தடம் மாறுகிறது. அதிலிருந்து மீண்டு சுபமாக தன் வாழ்க்கையை மாற்றுகிறான்.
‘நண்பன் ஒருவன் வந்தபிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு’ என்ற பாடல் வரியிலிருந்து படத்திற்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கதைப்படி நண்பர்களை விட்டுப் பிரிந்த பிறகே, நாயகனின் சிறகு விண்ணைத் தொடுகிறது. Become a star எனும் செயலியை உருவாக்கி விண்ணில் சிறகுகளை விரிக்கிறான். மேலும், நாயகனின் சிறகுகளை விரிக்க உதவுவது, அவன் சிறுவயது முதல் எதிரியெனக் கருதும் லலித் எனும் பாத்திரம்தான். பிறகு, விண்ணில் இல்லை மகிழ்ச்சி என மீண்டும் நண்பர்களிடத்தில் வந்துவிடுகிறான் ஆனந்த்.
படம் நட்பின் மேன்மையைப் பேசுகிறதா, வாழ்க்கையில் வெற்றி பெற சில தியாகம் (sacrifice) அவசியமாகிறது எனச் சொல்கிறதா, உழைத்தால் சாதிக்கலாம் என மோட்டிவேட் செய்கிறதா என்ற தெளிவில்லை. ஒற்றை நோக்கைச் சுற்றிப் பின்னப்படாமல் ஆனந்தின் வாழ்க்கையைச் சொல்கிறது படம். நண்பர்களுடன் இருத்தல் மகிழ்ச்சி என முடிக்கின்றனர். அப்படி வாழ்க்கை அனைவருக்கும் அமையாது என்ற யதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளாததால், படத்துடனான பிணைப்பு அழுத்தமாக ஏற்படவில்லை.
இளமைத் துள்ளலான காட்சிகள் அளவுக்கு, சோகத்தையோ, இயலாமையையோ வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் நடிப்பு கைவரப் பெறவில்லை எழுதி, இயக்கி நாயகனாக நடித்திருக்கும் அனந்திற்கு. நாயகியாக பவானிஸ்ரீ நடித்துள்ளார். இர்ஃபான், KPY பாலா, RJ விஜய், RJ ஆனந்தி, மதன் கெளரி போன்ற சமூக ஊடக பிரபலங்கள் நண்பர்களாக நடித்துள்ளனர். நாயகனின் தந்தை ரவியாகக் குமரவேலும், தாய் சுமதியாக விசாலினியும் நடித்துள்ளனர். என்ன படிக்கலாம் என்ற தேர்வைத் தன் அனுபவத்தைச் சொல்லி மகனுக்கு வழங்கும் காட்சி அற்புதமாக உள்ளது.
நண்பர்கள் சூழ உள்ள காட்சிகள் குதூகலமாகவும், அழுகாச்சி மனநிலையில் நாயகன் மட்டும் இருக்கும் காட்சிகள் வேகத்தடையாகவும் உள்ளன. நண்பனாய்ப் போய்ச் சேர்ந்த பிறகு எனும் தலைப்பு வேண்டுமானாலும் படத்தின் கதையோடு ஓரளவிற்குப் பொருந்தும்.