இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் – இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.
கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களை இயக்கிய இயக்குநர் இரா சரவணன், “சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை. இதுதான் எனக்கு முதல் மேடை. அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்தத் திரைப்படத்தை பார்த்துப் பாராட்டிய அன்றுதான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தைச் செய்திருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது.
ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி. பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணையைக் கூட்டிக் கேட்பதற்காக ஏதாவது குறை சொல்லிப் பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும், பிசினஸுக்காகப் படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்கக் கூட மாட்டார்கள். ஆனால் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் படம் பார்த்துவிட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, ‘இந்தப் படத்தை நான் தான் வெளியிடுவேன்’ என்றார்.
இந்த விசயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். இந்தப் படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன். அவர்களைத் தேடித்தான் போனேன். ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், ‘சரி நான் செய்கிறேன் வா’ என்று என்னை அழைத்துச் சொன்னார். அந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி நடத்தவில்லை. இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரைப் பாடாய்ப்படுத்தினேன். மக்கள் கூட்டத்தில் நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்தக் கதாபாத்திரமாக மாறி, இந்தப் படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்துத் தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன்.
இந்தப் படத்தை நாங்கள் எடுத்தோம் என்றாலும், இந்த படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு, இன்று இந்த மேடை வரை கொண்டு வந்தது, தின்க் ம்யூசிக் சந்தோஷ் அவர்கள் தான். அவர்தான் ஜிப்ரானையும் பரிந்துரைத்தார். நான் முதலில் இந்தப் படத்திற்கு இமான் அவர்களை அணுக வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சந்தோஷ், ‘ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் என்றார். அவர் எப்படியும் படம் பார்த்துவிட்டு முடியாது என்று தான் சொல்வார் என்று நினைத்துதான் படத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் படத்தை பார்த்த உடனே போன் செய்து, இந்தப் படத்தை கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று சொல்லி, மிக அற்புதமான இசையை தந்துள்ளார். என் படத்தை நானே பார்த்து பிரமிக்கும் அளவு, ஒரு இசையை அவர் தந்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதிக்கு இது முதல் படம் என்றாலும், நான் எழுதிய கதாபாத்திரத்தை, அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த ஊர் மொழியை கூட அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது, ‘சார்! இந்தப் படத்தில் நீங்கள் தான் நாயகன்’ என்று தான் சொன்னேன். முதல் பாடலே அவருக்கு தான் வைத்திருக்கிறேன். ‘எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருங்கள்’ எனும் ஒரு மிகச் சிறந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், “நண்பர் சந்தோஷ் தான் முதலில் ஃபோன் செய்தார், பின் இயக்குநர் வினோத்தும் இந்தப் படத்தைப் பார்க்கப் பரிந்துரைத்தார். அப்போதுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தை பார்த்தவுடனே, இயக்குநர் சரவணனுக்கு ஃபோன் செய்து, இந்தப் படத்தைக் கண்டிப்பாகச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்படிச் சொல்ல சுயநலம்தான் காரணம். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஒரு தளத்திற்குச் செல்லும், அதில் நாமும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக இந்த படம் பேசும் அரசியல் முக்கியமானது. நான் இந்தப் படத்திற்குள் இருக்கிறேன் என்பதுதான் எனக்குப் பெருமை. நான் எந்த உதவியும் செய்யவில்லை. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.