இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் – இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.
இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, “ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும். நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம். ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள். முதல் இரண்டு படங்களில், இரா. சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை இந்தப் படம் நிவர்த்தி செய்யும்.
சசி என் நண்பன், அவனைப் பொத்தி பொத்திப் பார்த்துக் கொள்வேன். ஆனால் இந்தப் படத்தில் அத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறான். நடிக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் சண்டைக் காட்சிகள் வைத்தால், பார்த்து நடந்து கொள்வார்கள். ஆனால் மக்கள் மத்தியில் விட்டுவிட்டால் அவர்கள் அடித்தே கொன்றுவிடுவார்கள். அது போல் தான் இந்தப் படத்திலும் நடந்தது. ஆனால் அவன் பட்ட கஷ்டத்திற்கெல்லாம், இந்தப் படம் அவனுக்குப் பெருமை தேடித் தரும். நந்தனுக்கு முன் – நந்தனுக்குப் பின் என சசி கொண்டாடப்படுவான்.
சுருதி உங்களை இனி தமிழ்நாடு கொண்டாடும். சிறப்பாக நடித்துள்ளீர்கள். இந்தப் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது. மிகச்சரியாக வந்து சேர்ந்தார் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார்.
இன்றைய காலகட்டத்திலும் இது நடந்து கொண்டிருக்கிறது, அதை மாற்றி மனிதனாக மாற வேண்டும் என்பதுதான் இந்தத் திரைப்படம். இது சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் மிகப்பெரிய வெற்றி தான். இந்தப் படத்திற்கு சீமான் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
சசிகுமார், “இந்தப் படத்தை முதலில் நான் தயாரிப்பதாக தான் இருந்தது, அப்போது நான் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன் ஆனால் இறுதியில் நான் நாயகனாக மாறிவிட்டேன். முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது. பின்னால் சரவணன் படும் கஷ்டத்தை பார்த்து, நானே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.
‘உங்களை வேறு மாதிரி பார்க்கிறேன். எப்படி இந்த கேரக்டரில் கஷ்டப்படுத்துவது?’ என தயங்கினார். ஆனால் நான் அவரைச் சமாளித்து நடித்திருக்கிறேன். எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள், இந்தத் திரைப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற போது, நான் யோசித்தது ரவி சாரை தான். அவர் மிக கறாராக இருக்கக் கூடியவர். ஆனால் அவரே படத்தை துளி துளியாக ரசித்தது எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி” என்றார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “இறைவனைக் காண இசைப்பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. ஆனால் இந்த இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல, மனிதனைக் காண! மனிதனைக் காண்பதற்கு வெளியிடும் இசைதான் இந்த நந்தன். நாம் ரசிப்பதற்கு அல்ல இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை. இந்த இசையை உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் நம் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன்.
இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும், இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்தத் திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான் ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி, அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு. அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரக்கனி மிக அருமையாக நடித்து இருக்கிறான். நான் செய்ய வேண்டிய பாத்திரம் அது. என்னை அழைத்திருந்தால் வந்து நடித்திருப்பேன். ஏனெனில் படத்தில் உள்ள அந்தப் பாத்திரம் தான் நான். படத்தைத் தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.
மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான். ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூடத் தவறாக நடிக்கவில்லை. அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர்.
மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்தத் திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்தத் திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு. என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள்” என்றார்.