Shadow

நெடுநீர் விமர்சனம்

நெடுநீர் என்றால் கடல் எனப் பொருள்படும். கடலூரைக் கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கதையின் நிகழ்வும் கடலும், கடல் சார்ந்த பகுதிகளிலுமே நடக்கிறது.

தனது தந்தையிடம் இருந்து சிறுமியான அமுதாவைக் காப்பாற்ற, அப்பாவைத் தாக்கிவிட்டு அமுதாவுடன் ஓடி விடுகிறான் சிறுவன் கருப்பசாமி. இருவரும் பிரிந்துவிட, இளைஞனாகும் கருப்பு பல குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் கருப்பைக் கொலை செய்ய, தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுது, அமுதாவின் கண்களில் விழுகிறான். கொலைகாரனாக உருமாறி இருக்கும் கருப்புவும், அமுதாவும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே நெடுநீர் படத்தின் கதை.

தனது உயிரைக் காக்கும் கருப்பசாமியைக் காப்பாற்றி, அண்ணாச்சி அவனைத் தனது வளர்ப்பு மகன் போலவே வைத்துக் கொள்கிறார். அவரது தொழில் வாரிசாக அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்துகிறார். தனது நண்பரைக் கொன்ற சொந்த மகனையே, கருப்பசாமியை வைத்துக் கொல்கிறார். அண்ணாச்சியாகக் கம்பீரம் காட்டி அச்த்தியுள்ளார் சத்யா முருகன். கம்பீரமான அவரது ஆகிருதி, அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. குணச்சித்திர நடிகராகப் பரிமளிக்க ஏற்றதொரு நடிகர்.

கருப்புவாக நடித்துள்ளார் ராஜ்கிருஷ். அவரது காதலியாக இந்துஜா நடித்துள்ளார். புதுமுகங்களான இருவரும், அந்தக் கதாபாத்திரத்தைப் போதுமான அளவு சுமக்கச் சிரமப்படுகின்றனர். எளிய மனிதர்களின் வாழ்வில் நேரிடும் எதிர்பாராத சம்பவங்களால் கதை பின்னப்பட்டிருந்தாலும், அது, சுவாரசியத்தைத் தூண்டும் திரைக்கதையாக மாறவில்லை. எனினும், படத்தின் எதார்த்தமான ஓட்டம், படத்தை ரசிக்க வைக்க உதவியுள்ளது.