படாதபாடுபட்டு ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, படமொன்றை இயக்கச் செல்கிறார் செல்வ அன்பரசன். அங்கே நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களால், அதுவரை எடுக்கப்பட்ட படம் அனைத்தும் வினோதமான முறையில் மறைந்துவிடுகிறது. காணாமல் போன ஒரு பேய்தான் அதற்கு காரணமான தெரிய வருகிறது. பேயைக் கண்டுபிடித்துப் படத்தை முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பேயாக மீரா மிதுன் நடித்துள்ளார். ஒப்பனை கலைஞருக்கு யார் மீது என்ன கோபமோ என்ற எண்ணத்தை எழுப்பும் வண்ணம், மீரா மிதுனிற்கான ஒப்பனை அமைந்துள்ளது. நாயகனாக G. கெளசிக்கும், நாயகியாக சந்தியா ராமசந்திரனும் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உதவாத பாத்திரத்தில் முல்லை கோதண்டம் தோன்றியுள்ளார். கதை, திரைக்கதையும் மிகவும் பலவீனமாக உள்ளது. ஃப்ளாஷ்-பேக் காட்சிகயில் வரும் தருண் கோபி – மீரா மிதுன் கதையும் கூட ரசிக்கும்படியாக எடுக்கப்படவில்லை.
படத்திற்குள் எடுக்கப்படும் படத்தை இயக்குபவராகவும் இயக்குநர் செல்வ அன்பரசன் நடித்துள்ளார். கதைக்குள் நகைச்சுவைக்கு முயற்சி செய்திருந்தாலும், டைட்டில் க்ரெடிட்ஸிலும், ப்ளூப்பர்ஸிலும் அதகளப்படுத்தியுள்ளார். சூப்பர் மாடல் என மீரா மிதுனை, சூப்பர் ஸ்டாரின் பெயர் திரையில் வருவது போல் உருவாக்கிவிட்டு, அதை கவுண்டமணியின் வீடியோ மீம் ஒன்றின் மூலமாகக் கலாய்த்துள்ளார். படம் முடிந்ததும், ப்ளூப்பர்ஸில், படம் எப்பொழுது தொடங்கியது, மீரா மிதுன் எப்பொழுது இணைந்தார், லாக்-டவுனால் எழும் பிரச்சனை, மீரா மிதுன் கைதால் படம் தாமதமானது, மீரா மிதுனைப் படத்திற்குள் கொண்டு வந்த மணவை புவனைக் கலாய்ப்பது என ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கியுள்ளார். லாக்கப்பில் இருந்து வெளிவந்தும், படப்பிடிப்பிற்கு சரியாக வராத மீரா மிதுனின் மீதான கோபத்தை, ப்ளூப்பர்ஸில் நையாண்டியாகத் தீர்த்துக் கொண்டுள்ளார் இயக்குநர் செல்வ அன்பரசன்.