Shadow

நீல நிறச் சூரியன் விமர்சனம்

வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், தகிப்பையும் தவிப்பையும் ஒரு கணமேனும் மனிதராகப்பட்ட ஒருவரும் அனுபவித்திருப்பார்கள். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை ஏற்கும் பொழுது, தனது உழைப்பைப் பிறர் திருடி ஆதாயம் அடையும் பொழுது, தகுதியற்றவர் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது என தகிப்பும் தவிப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஏற்பட்டிருக்கும். அதில், உடலால் ஒரு பாலினமாகவும், மனதால் வேறு பாலினமாகவும் உணரும் ஒருவரது தகிப்பும் தவிப்பும் அடங்கும். ஒப்பீட்டளவில் இது மிகக் கொடுமையானது. அக்கொடுமை ஆண்டுக்கணக்காக, சில சமயம் மரணம் வரையிலுமே கூட நீளும். தகிப்பைத் தணிக்க நீரில் இறங்கினால், மீண்டும் நீரில் இருந்து எழ முடியாதபடிக்குத் தலையைப் பிடித்து நீரிலேயே அமிழ்த்துவிடப் பார்க்கும் இந்தச் சமூகம், சமூக ஏளனம், குடும்ப மானம், உறவுகள், இத்யாதிகள். நாகரீக பாவனைக்குக் கீழ், இந்தச் சமூகம் ஒளித்து வைத்திருப்பது முட்டாள்த்தனமான நம்பிக்கைகளும் கட்டுப்பெட்டித்தனங்களையும் தான். அம்முட்டாள்த்தனத்திற்கு ஓர் ஆபத்து என்றால் ஆணவ கொலை, பெற்ற பிள்ளையின் பால்மாறுதல் இயல்பெனப் புரியாமல் துரத்திவிடுவது போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் இருக்கப் பழகிக் கொண்டுள்ளது இச்சமூகம்.

ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அரவிந்தன், தன்னைச் சிறுவயது முதலே பெண்ணாக உணருகிறார். மருத்துவத்தின் உதவியோடு பானுவாக மாறி, பல வருட தகிப்பைத் தணித்துக் கொண்டு blue sunshine ஆக மாறுகிறார். அடுத்த கட்டமாக, அவரது நிலை தகிப்பிலிருந்து தவிப்பிற்குச் செல்கிறது. அம்மா, அப்பா, உறவினர், வேலையிடத்தில் சக ஊழியர்கள், தனக்குக் கீழ் பயிலும் மாணவர்கள் என அனைவரையும் தவிப்போடு எதிர்கொள்கிறார். தகிப்பிற்குத் தவிப்பு பரவாயில்லை என்பதே பெரும்பாலான திருநர்களின் வாழ்க்கை.

அரவிந்தனாக இருக்கும் பொழுதே, பானுவைப் புரிந்து கொள்ளும் உற்ற தோழியாக ஹரிதா நடித்துள்ளார். உடற்பயிற்சி ஆசிரியையாக வரும் ஹரிதா, பானுவின் எல்லா முடிவுகளுக்கும், பானு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் துணை நிற்கிறார். அரவிந்தன்களுக்கு ஹரிதா போல் ஒரு தோழி கிடைத்தல் வரம். அனுசரணையான ஒரு தோள் தரும் இதம், இன்னல்களைக் கடக்கும் மனோதைரியத்தை அளிக்கவல்லது. ஹரிதா தனது கம்பீரமான நடிப்பால் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

லப்பர் பந்து படத்தில் தினேஷின் அம்மாவாக மருமகளை மிஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த கீதா கைலாசத்திற்கு, இப்படத்திலும் அட்டகாசமான பாத்திரம் வாய்த்துள்ளது. மகனென நினைத்து வளர்த்த பிள்ளை, மகளாக மாறி நிற்கும் அதிர்ச்சியை தாங்கவொன்னாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் தாய் பாத்திரம். மகன் மகளாகி விட்ட சோகம் ஒருபுறம் என்றால், பிள்ளையின் மாற்றத்திற்குத் தாய் தான் காரணமெனக் கணவரும் கோபித்துக் கொள்கிறார். எல்லாப் பழியும் வந்து குவியும் இடத்தில் பெண்களைச் சாமர்த்தியமாக நிறுத்தி விடும்படி அமைக்கப்பட்டுள்ளது இந்தியக் குடும்ப அமைப்பு. இந்தக் கருத்தினை வலியுறுத்தும் விதமாக, பானுவின் அக்காவாக நடித்திருக்கும் செம்மலர் அன்னத்தின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘ஆணாக இருக்கிறதுதான் பாதுகாப்பு. பெண்கள் எல்லாம் பாவப்பட்டவர்கள்’ என தம்பியின் மாற்றத்தைப் பெண்கள் மீதான சமூக அழுத்தத்தின் கோணத்தில் இருந்து அணுகுகிறார் செம்மலர் அன்னம். ‘பெண்ணாக இருக்கிறது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்’ என தலைகுனிந்து கொள்கிறார் பானு. அரவிந்தனைத் துறக்கும் பானுவாக சம்யுக்தா விஜயன் நடித்துள்ளார். இவர், கோலிவுட்டின் முதல் திருநர் இயக்குநருமாவார். சந்தோஷாக இருந்து தகிப்பையும் தவிப்பையும் கடந்து சம்யுக்தா விஜயனாகக் கனிந்திருப்பதால், அவரது படைப்பில் பெரிய சமூக கோபம் வெளிப்படவில்லை. ஆதங்கம் கொஞ்சமாகவும், empathy அதிகமாகவும் உள்ளது. பானு, தன்னை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சக மனிதர்களை மிகுந்த கரிசணத்துடனே அணுகுகிறார். பானுவின் அந்த அக அழகும் நிர்மலமும் படத்திற்குக் கூடுதல் அழகை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெரும் வலியை ஒரு கவிதை போல் மென்மையாக்கிப் பார்வையாளர்களுக்கு அளித்துள்ளார் சம்யுக்தா விஜயன். திரைக்கதையின் எளிமை, பார்வையாளர்கள் மீது blueshine-ஐப் படரவிட்டுள்ளது.