Shadow

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

ஆர்டிகள் 15 எனும் ஹிந்திப் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு, மிக நேர்த்தியாக மூலத்தின் சாரம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்றில்லாமல், சில காட்சிகளைத் தவிர்த்தும், உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் காட்சிகளைச் சேர்த்தும், நெஞ்சுக்கு நீதியைத் தூக்கி நிலைநிறுத்தியுள்ளனர்.

விஜயராகவன் ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். இரண்டு தலித் சிறுமிகளைக் கொன்று மரத்தில் தூக்கில் போட்டுத் தொங்க விட, அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அரசியல் செல்வாக்குள்ள மனிதர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி, எப்படிக் குரலற்றவர்களுக்கு விஜயராகவன் நீதி வாங்கித் தருகிறார் என்பதே படத்தின் கதை.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஐயராக சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியுள்ளார். அவரது போலியான பணிவும், அச்சுறுத்தும் நயவஞ்சகமும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. குமரனாக நடித்துள்ள ஆரி அர்ஜுனன், அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அவரது பார்வையும் உடற்மொழியும் அவரேற்ற கதாபாத்திற்குத் தக்கவாறு அமைந்திருந்தன. வாசனாக நடித்துள்ள அப்துல் லீயும், நடராஜாக நடித்துள்ள ராட்சசன் சரவணனனும் நன்றாக நடித்துள்ளனர்.

தலித் தலைவரும், ஓர் ஆசிரம சாமியாரும் சம பந்தி போஜனம் செய்யும் அரசியல் மாய்மாலக் காட்சிகள் ஹிந்திப் படத்தில் இருக்கும். அதைக் கவனமாகத் தவிர்த்தவர்கள், தலித் கட்சி பற்றிய எதிர்மறை வசனத்தை வைத்திருப்பது திட்டமிட்ட அரசியல் செயற்பாடு என்பது திண்ணமாகிறது. கத்தி மேல் நடக்கும் கதையை லாகவமாகக் கையாளாவிட்டால், திமுகவின் ஆட்சிக் காலத்தின் மீதான விமர்சனமாகத் திரும்பிவிடும் என்ற அதீத பிரக்ஞையுடன் காட்சிகளை அமைத்துள்ளனர். அவ்வாறான உருவாக்கத்தில், படத்தின் பலம் வசனங்களாக இருக்கும் பட்சத்தில், அக்குறிப்பிட்ட வசனத்தைத் தவிர்த்திருக்கலாம். கதை நடக்கும் களமாகப் பொள்ளாச்சியைத் தேர்ந்தெடுத்தது நல்ல அரசியல் மைலேஜ் தரும் சாமர்த்தியமான நகர்வு.

உதயநிதி ஸ்டாலின் பெரிதாக நடிக்க மெனக்கெடவில்லை. நாயகி கிண்டல் செய்வது போல், விஜயராகவன் ஓர் ஐரோப்பராக இல்லை. ‘முப்பது ரூபாய் சம்பளம் உயர்த்தி கேட்டதற்காகக் கொலை செய்வார்களா?’ எனும் வசனத்தில் உள்ளார்ந்த ஆச்சரியமோ, வருத்தமோ உதயநிதியின் முகத்தில் எழவில்லை. முகத்திலறியும் அந்த உண்மை புரியும்போது தான், அந்தக் கதாபாத்திரத்திற்குள் (ஆயுஷ்மான் குரானா) ஓர் உள்ளார்ந்த மாற்றம் ஏற்பட்டு, ஒரு தீவிரத்தன்மையுடன் களத்தில் இறங்குவார். உதயநிதியோ, முதல் ஃப்ரேமில் இருந்தே, மண் மணம் மாறாமல் சக அதிகாரிகளிடம் முறுக்கிக் கொண்டு ஒரு தீவிரத்தன்மையோடே இருக்கிறார். அவர் அறிமுகமாகும் முதல் ஃப்ரேமிலேயே ஒரு பெரிய சாதனை புரிவதற்குத் தயாராகிவிடும் முக பாவனையில் உள்ளார். பின் படம் முழுவதுமே அதைத் தொடர்கிறார். சில இடங்களில், வசனங்களை வேகவேகமாக ஓர் அவசரத்துடன் ஒப்புவிக்கிறார். ஆனால், இது எதுவுமே குறையாகத் தெரியாத அளவு, திரைக்கதையைக் கதாபாத்திரங்களின் மீது அடர்த்தியாகப் படரவிட்டுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா.