Shadow

நிறம் மாறும் உலகில் | சொல்லமுடியாத ஒரு ரணத்தைச் சொல்லும் படம்

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பாலா சீதாராமன், ”திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்பக் கலைஞராக அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் ‘கலை தாய்’ எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்தத் தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ எனும் இப்படத்தைத் தயாரித்திருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கக் காத்திருக்கிறோம்” என்றார்.

நடிகை ஜீவா சுப்பிரமணியம், ”இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தைச் சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன என்பதை மார்ச் ஏழாம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார்” என்றார்.

நடிகை ஆதிரா, ”இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்தத் திரைப்படம் வலியுறுத்துகிறது” என்றார்.

நடிகை விஜி சந்திரசேகர், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். ‘அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா?’ எனக் கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம். இந்தத் திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்தத் திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

நடிகை காவ்யா அறிவுமணி, ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாகப் படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை விளம்பரத்தைப் பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தைப் பார்த்த பிறகு, ‘நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது?’ என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என நடித்து ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.

முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்குத் தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும்’ என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.