Shadow

காஃப்காவினால் அல்ல!

Kafka---Krishnan-Nambi

ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள்.

இவர் எழுதிய ‘The Metamorphosis’s (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை.

காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் தங்க ஒரு…. எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய “இலக்கிய வட்டம்” எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து ‘லில்லிபுட்’ என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சின் உள்ளே குடித்தனம் நடத்துகிறார்கள்!

நம்பி, காஃப்காவைப் படித்ததில்லை என்பது எனக்குத் தெரியும். காஃப்கா எழுதிய ‘உருமாற்றம்’ கதையைத் தான் நம்பியிடம் சொன்னதாகவும், அதைக் கேட்ட நம்பி அதன் தாக்கத்தில் “தங்க ஒரு..” கதையை எழுதியதாகவும் சுந்தர ராமசாமி பதிவு பண்ணியிருக்கிறார். அப்படியெல்லாம் முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால் அதை மறுப்பதற்கான வலுவான காரணங்கள் என்னிடம் உள்ளன.

1960ஆம் ஆண்டு இறுதியில் நாங்கள் படித்து வந்த கல்லுரியிலிருந்து, கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் முதலில் பெங்களூர் சென்றடைந்தோம். தொடர்ந்து மைசூர், பத்ராவதி, ஷிமோகா, பூனா போன்ற இடங்களைப் பார்த்துவிடு, பம்பாய் போய்ச் சேர்ந்தோம். பம்பாயிலிருந்து நேராகச்சென்னை தான். சென்னை வந்தவுடன் சுற்றுலா நிறைவு பெறுகிறது.அப்புறம் அவரவர் பாடு!

சென்னை வந்து சேர்ந்த நான் நேராக கிருஷ்ணன் நம்பி தங்கியிருந்த சங்கர் லாட்ஜ் ஹோட்டலுக்குச் சென்றேன். ராயப்பேட்டை மணிக்கூண்டின் எதிரே அந்த ஹோட்டல் இருந்தது. அப்போது நம்பி ‘நவசக்தி’யில் வேலை பார்த்து வந்தார். அன்றிரவு உணவிற்குப் பிறகு எனது பயண அனுபவங்களை விரிவாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
பெங்களூர் முதல் பம்பாய் வரையிலான அனைத்து அனுபவங்களையும் கூறினேன்.பெங்களூரில் நண்பர்களுடன் முதன் முதல் மது அருந்தியதை மாத்திரம் சொல்லவே இல்லை.

பம்பாயில் ஒரு இடத்தில் தன் காரின் அருகே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த அன்றைய பிரபல நடிகை நூடனைப்பார்த்த விஷயத்தை மிகவும் ஆச்சரியத்துடன் விவரித்தேன். மலபார்ஹில்ஸ் பகுதியில் இருந்த கமலா நேரு பார்க்கில் நான் கண்ட காட்சியைக் கூறியவுடன் நம்பி வியப்படைந்தார். காட்சிகளை மறுபடியும் சொல்ல வேண்டினார்.

அங்கு ஒரு பூட்சின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த, சிறுவர்கள் சறுக்கி விளையாடும் வசதி கொண்ட ஒரு ராட்சச பூட்சைப் பற்றிக் கூறினேன். மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.பேசி முடிந்து உறங்கச் செல்வதற்கு அன்று சற்று நேரமாகிவிட்டது. மறுநாள் நான் கிளம்பி நாகர்கோவில் போய்விட்டேன்.

இந்த உரையாடல் நடந்த ஒன்றிரண்டு மாதங்களில் “தங்க ஒரு…” கதையை எழுதி முடித்தருந்தார் நம்பி. இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்பியை நான் சென்னையில் சந்தித்த போது, அவர் சென்னைக்கு வந்து ஒரு வருஷத்திற்கு மேலாகியிருந்தது. எனவே சுந்தர ராமசாமியுடனான நம்பியின் சந்திப்பு நிச்சயமாக ஒரு வருஷத்திற்கு முன்பு தான் நடந்திருக்கிறது.

காஃப்காவைப்பற்றி சு.ரா.சொல்லியிருந்து அதன் தாக்கத்தில் இக்கதையை எழுத நம்பி ஏன் இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? பம்பாய் மலபார் ஹில்ஸ் ராட்சத பூட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கதை ஏன் எழுதப்படுகிறது?

Thanga-Oru-boots கமலா நேரு பார்க், மலபார் ஹில்ஸ்

சுந்தர ராமசாமி இம்மாதிரி ஒரு “க்ளெயிம் (claim)” போட்டிருக்கக்கூடாது. ஆனால், இக்கதை வெளிவந்தபின் இக்கதையைப் பற்றிய சுந்தர ராமசாமியின் பதிவுகள் மிக முக்கியமானவை. அவர் எழுதியிருப்பதைப்பார்ப்போம்.

“யதார்த்தவாதக் கதைகள் இலக்கிய உலகை ஆட்சி செய்து கொண்டு வந்த காலம் அது. யதாராத்தபாணியை ஏற்றுத்தான் நம்பியும் பல கதைகள் எழுதியுள்ளார். இந்தக் கதையை எழுதிய முறையில் ஒரு மாற்றம் இருக்கிறது. ஒரு யதார்த்தவாத அனுபவத்தை, கற்பனை கலந்து, முற்றிலும் புதிய உருவத்தைத் தந்து இதனைப் படைத்திருக்கிறார்.

சென்னையில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அலைந்து அல்லல்படுவது நமக்குத் தெரியும். மிகச்சிறிய வீடுகளில் அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சார்ந்து எல்லாவற்றையுமே குறுக்கிக் கொள்ள நேர்கிறது. இந்தக் குறுக்கலை மையமாக வைத்து தமிழுக்கு முற்றிலும் புதுமையான படைப்பு ஒன்றை நம்பி தந்திருக்கிறார்.

கதையின் மையப்பிரச்சினை சார்ந்த அனுபவத்தை யதார்த்த தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றதே கதைக்குப் புதுமையையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. மையப் பிரச்சினை சார்ந்த கொடுமை மேலும் அழுத்தம் பெறுகிறது.

பொருளாதாரத்தன் நிறைவு இல்லாதவர்களுக்கு நவீன வாழ்க்கை தரும் நெருக்கடியைப் பற்றியது இக்கதை. பட்டணம் போன்ற மக்கள் தொகை மிகுந்த பின்னணியில் இருப்போர் குடியிருக்கத் தகுந்த இடமின்றி, படும் அவஸ்தைகளுக்கு கதை, மிகை அழுத்தம் தருகிறது. இக்கதையை பின் நவீனத்துவச்சாயல் கொண்டது என்றும் நாம் கூறமுடியும்.பின் நவீனத்துவப்பார்வை தமிழிலோஅல்லது இந்திய இலக்கியங்களிலோ அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் நம்பி எழுதிய கதை இது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதோடு மாறிவந்த புதுமைப்போக்கு நிறைவாக நிற்கும் கதை இது” எனக் கூறுகிறார் சுந்தர ராமசாமி. இன்னுமொரு இடத்தில் மாய யதார்த்தவாத (magical realism) கதை எனவும் கூறுகிறார்.

எழுத்தாளர் நகுலன் இக்கதையைப் பற்றி எழுதும் போது ‘”கேலிச்சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிளாளையும்’ விடச்சிறப்பாக வந்திருக்கிறது என்பது என் அபிப்பிராயம்” என பதிவு பண்ணியிருக்கிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்த அற்புதமான கதை எழுதப்பட்டது ‘காஃப்காவினால் அல்ல’. அந்தப்பெருமை அதற்கு களம் அமைத்துக் கொடுத்த மலபாராஹில்ஸ் கமலா நேரு பார்க் ராட்சதப்பூட்சுக்கே போய்ச்சேர வேண்டும். சு.ரா. மன்னிக்க வேண்டும்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்