தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று பாசத்துடன் சொல்லி இவரை அரவணைத்தவர் கருணாநிதி.
சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. செயல் வீரர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில் அவர்களுடைய ‘அனைத்து வகை விளையாட்டு’க்களுக்கும் எதிர் விளையாட்டை நடத்திக் காட்டி கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றியவர்.
கருணாநிதியாக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, முகத்துக்கு நேராகப் பளிச்சென்று பேசிவிடும் பழக்கமுள்ள ஜெ.அன்பழகன், ஸ்டாலின் முகாமுக்கு வந்து ஒன்றிணைவதற்கே சில ஆண்டுகள் ஆயின. ஆயினும் இவரது திறமைக்காகவே பொறுமையாகக் காத்திருந்து இவரை அரவணைத்துக் கொண்டார் ஸ்டாலின்.
2001 ஆம் ஆண்டில் முதன்முதலாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைப்பட்ட காலத்தில் சினிமா துறையில் நுழைந்து ஃபைனான்சியராகவும், விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். அமீர் இயக்கிய ஆதி பகவன் படத்தின் தயாரிப்பாளர் இவரே!
கொரோனா ஏற்கெனவே உடல் உபாதைகளுடன் இருப்பவர்களைப் பாதித்தால், அவர்களை உயிர் பிழைக்க வைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லி வருவதை உண்மையாக்கிவிட்டது இவருடைய மரணம்.
அதிலும், தன்னுடைய பிறந்த தினத்தன்றே அவர் இறந்துள்ளார். கொரோனா காலத்தில் அமைச்சர்களும், ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த சூழலில், எளிய மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதவிகளை வழங்க எண்ணி பல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார். பலர் எச்சரிக்கை செய்தும் தன் தொகுதி மக்களைக் கடைசிவரையிலும் அவர் கைவிடவில்லை.
இதனாலேயே கொரோனாவும் தொற்றிக் கடைசியாக காலனையும் பற்றிக் கொண்டார் ஜெ.அன்பழகன். கொரோனா காலத்திய தமிழக வரலாற்றில் ஜெ.அன்பழகனுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது. இவரது மறைவு, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகத்தினருக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கும், ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
– உண்மைத்தமிழன்