Search

பெண்குயின் விமர்சனம்

penguin-review

ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.

“ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது.

படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களே, தங்கள் மகிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, வில்லன்களிடம் அடி வாங்குகிறார்கள், இறக்கவும் செய்கிறார்கள். இப்படத்தில், கர்ப்பினிப் பெண்ணான நாயகியோ ஒரு சிறு பதற்றமும் இல்லாமல் நடமாடிய வண்ணமே உள்ளார்.

மகனின் நினைவுகளிலே ஆறு வருடங்களாகத் தவிக்கும் நாயகிக்கு, ஒரு துப்பு கிடைக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் பல சாகசங்கள் புரியத் தயாராக இருக்கும் நாயகி, கிடைக்கின்ற அந்தத் துப்பை அலட்சியமாக விட்டுவிட்டுச் செல்கிறார். தவறவிட்டார் என்ற அளவுக்காவது அந்தக் காட்சியில் பதற்றத்தைக் கொண்டு வந்திருக்கவேண்டும். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகிலேயே மயங்கிக் கிடக்கிறதே தவிர, கதாபாத்திரங்களின் உணர்ச்சியைக் கோட்டை விட்டுவிடுகிறது. பிளாஸ்டிக் தன்மையோடு மனிதர்கள் நடமாடுகிறார்கள். கீர்த்தி சுரேஷிடம் கூட ஒரு பதற்றம் இருக்கிறதே தவிர, அஞ்சனா எனும் சிறுமியின் தாயிடமிருந்த பதைபதைப்பு மிஸ்ஸிங். கீர்த்தியின் முதல் கணவராக வரும் லிங்காவும், அஜயாக நடித்திருக்கும் மாஸ்டர் அத்வைத்தும்தான் ஆறுதல் அளிக்கின்றனர். பெரியவர்களின் அனைத்துச் சொதப்பல்களையும் முடிந்தளவுக்குத் தோளில் தாங்கி அசத்தியுள்ளார் அத்வைத்.

படத்தின் இன்னொரு மிகப் பெரும் சறுக்கல், கதாபாத்திரங்களுக்கு இடையேயான ரிலேஷன்ஷிப். மேடை நாடகத்தில் தனது காட்சிக்காகக் காத்திருந்து, மேடைக்கு வந்து செல்பவர்கள் போலவே, ஃப்ரேம்க்குள் காத்திருந்து உள் நுழைகிறார்கள். ‘ஓகே, நம்ம சீன் முடிஞ்சிடுச்சு’ என டயலாக் பேசியதும் கிளம்புகிறார்கள். அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த கீர்த்தி சுரேஷ், கையில் சங்கிலியில் கட்டப்பட்டுக் கொடுமைக்கு உள்ளாகி ஆறு வருடம் கழித்துக் கிடைத்த மகனை, அன்றிரவே தனி அறையில் படுக்க வைக்கிறார். அதற்கு முன், வீட்டுக்கு வெளியில் கீர்த்தி சுரேஷ் புன்னகைக்கும் முகத்துடன் ஹோஸ்-பைப் கொண்டு அவன் முதுகில் நீரடித்து சுத்தம் செய்கிறார், அப்படியே நாயையும் அதே போல் சுத்தம் செய்கிறார். சொந்த மாநிலத்திற்கு நடந்து வந்த கூலிப் பணியாளர்களை உத்திர பிரதேச அரசாங்கம் நிற்க வைத்து மருந்து தெளித்ததை விட மிகக் கொடுமையான செயல் இது. ஒரு பெண் தன் தோழிகளுடன் தனித்திருக்கும் சமயத்தில் எப்படிப் பேசுவார், கணவனுடன் எப்படிப் பேசுவார், நீண்ட நாட்களுக்குப் பின், தொலைந்து விட்ட மகன் கிடைக்கும் பொழுது எப்படி நடந்து கொள்வார் என்று எந்த அக்கறையும் கவனமும் கொள்ளாமல் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்.

Keerthy-Suresh-as-Rhythm

போதாக் குறைக்கு, அன்லிமிடெட் பொங்கலைச் சாப்பிட்டது போல் ஒரு சைக்கோ வில்லன் (அதே கடையில்தான், இரண்டாவது கணவர் கெளதமாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜும் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டுள்ளார் என்பதைச் சுலபமாக யூகிக்க முடிகிறது). பேசுறது, நடக்கிறது, சிரிக்கிறது என அனைத்தையும் ஸ்லோ-மோஷனில் செய்கிறார் அந்த சைக்கோ டாக்டர். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகும் கூட, அவரிடம் உள்ள அந்த பொங்கல் எஃபெக்ட் குறையாததால் மிக மொக்கையாக மாட்டிக் கொள்கிறார். பதினாறு கொலைகள் செய்த அந்தக் கொலைகாரனின் பொங்கல் மயக்கம் கொஞ்சம் தீர்ந்ததும், விக்ரம் வேதா பாணியில் நாயகிக்கு அவரது மகனைக் கடத்தியது யாரெனத் துப்பு தருகிறார். “அட கொலைகார நாயே உனக்கென்னடா இவ்ளோ அக்கற?” என்று பார்வையாளர்கள் மனதில் எழும் கேள்விக்கு, ‘ஏன்னா எனக்கு நாயகியின் தைரியம் ரொம்பப் பிடிக்கும்’ என்று சொல்கிறார். இதற்கு அது பதிலில்லையே எனக் கொலக்காண்டு ஆகிறது.

பார்வையாளர்களை ஒரு வழி செய்துவிட்டு, ஒருவழியாகப் படம் சுபமாக முடிந்ததே எனப் பார்த்தால், கீர்த்தி சுரேஷ் தனது மகனுக்கு “பெண்குயின்” கதை சொல்லுவதாகத் தலைப்பைக் கொண்டு வந்து க்ளைமேக்ஸில் முடிச்சுப் போட்டுள்ளனர். ஏன் இந்தப் படத்துக்கு ‘பெண்குயின்’ என்று தலைப்பு வைத்தார்கள் எனப் பார்வையாளர்கள் குழம்பி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரின் அந்தத் “தாய்” மனம் இருக்கில்ல? ப்ப்பாஆஆ.. எங்கேயோ போய்விட்டது தமிழ் சினிமா.