அருண் விஜயின் மகன், மாஸ்டர் அர்னவ் விஜய் நாயகனாக அறிமுகமாகும் குழந்தைகளுக்கான படம். கண் தெரியா நாய்க்கும், சிறுவன் ஒருவனுக்குமான பந்தத்தை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை படம் உணர்த்தினாலும்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்
என்ற குறளினை அழுத்தம் திருத்தமாகப் படத்தின் இறுதியில் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடித்துள்ளனர். வீட்டிலுள்ள சுட்டீஸ் குட்டீஸோடு பார்க்க வேண்டிய ‘டிஸ்னி’ பாணி கதை.
வினயை டெம்ப்ளேட் வில்லனாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. ஒரு நாயின் வரவு, எமோஷ்னலாக ஒரு குடும்பத்தை எப்படிப் பிணைக்கிறது என்றில்லாமல், சிறுவனுக்கும் நாயுக்குமான பந்தத்திலேயே நிலைகொண்டுள்ளது படம். அந்த பந்தம், ஹார்ஸ் ட்ரெயினரான அருண் விஜயின் சாமர்த்தியங்களையும் விஞ்சுவதாக உள்ளது. இயல்பு வாழ்க்கையில் சாத்தியமே இல்லாத பல விஷயங்கள் ஜஸ்ட் லைக் தட் படத்தில் நிகழ்கிறது. உதாரணத்திற்கு, நாயின் கண் ஆப்ரேஷன். ஆனால் ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து நோக்கினால் மட்டுமே, அத்தகைய அசாத்தியங்களின் பின்னுள்ள மகிழ்ச்சியையும் நிறைவையும் அனுபவிக்க இயலும். பெரியவர்களின் தர்க்கத்திற்குக் கட்டுப்படாத நிர்மலமயமானதொரு சிறுவர் உலகில், அன்பும் பாசமும் மகிழ்ச்சியும் மட்டுமே பிரதானமாய் இருக்கும். படம் அந்தப் புள்ளியைத் தொட்டாலும், பெரியவர்களையும் கவரும் டிஸ்னியின் மேஜிக்கை எட்டுவதில் பாதி கிணறையே தாண்டியுள்ளது.
சிம்பா எனப் பெயர் வைக்கும் முன், அக்கண் தெரியாத நாய், அர்னவின் வாசத்தைப் பின்தொடர்ந்து செல்லும்போது, தரையில் கிடக்கும் மரத்தை அவ்வளவு அழகாகத் தவ்விக் குதிக்கிறது. படத்திற்கென ஒரு குட்டி நாயை வாங்கி, அதற்கு ட்ரெயினிங் கொடுத்து, முழுமையான அழகைத் திரையில் கொண்டு வர முயற்சி செய்துள்ளது 2டி என்டர்டெயின்மென்ட். குழந்தைகளுக்கான படமென்பது இங்கே அரிதினும் அரிதாகவே வருகிறது. அதற்காக 2இன் முயற்சிக்கு ஒரு சிறப்புப் பாராட்டு.