Shadow

பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

பணம், புகழ், அதிகாரம் இவற்றுக்கு ஆசைப்படாத, தான் நம்பும் நேர்மையும் கொள்கையுமே முக்கியம் என்று செயல்பட்டு, பிரச்சனைகளில் மாட்டி இழப்புகளைச் சந்தித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு தனது வழியிலேயே வாழ்வதற்கு போதை தருவது எதுவாக இருக்கும்?

குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மதித்தாலும், பிழைக்கத் தெரியாதவன் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனாலும் உண்மை ஒன்றுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் இலட்சியவாத மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒருவரை கதைநாயகராக வைத்து வெளிவந்த ஹிந்தி சீரிஸ் “பாதாள் லோக் (பாதாள உலகம்)” ஆகும். பொதுவாக ஹிந்தி சீரிஸ்களில் முதல் பாகம் வெற்றி பெற்றதும் அடுத்த பாகத்தைத் திணித்து எடுப்பார்கள். சேக்ரட் கேம்ஸ், மிர்ஸாபூர், பஞ்சாயத் போன்றவை அப்படித் தான் அமைந்தன. அதனால் பாதாள் லோக் சீரிசின் இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கிறது என்று அறிந்தும் அதைப் பார்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன் சாதாரணமாகப் பார்க்க ஆரம்பித்து, எட்டு அத்தியாயத்தையும் முழுவதும் பார்த்து முடித்தேன். நிச்சயம் மிகச் சிறப்பான படைப்பு.

நாகாலாந்து பின்னணியில் கதையை அமைத்திருந்தாலும் நாகாலாந்து நிலப்பரப்பின் குழப்பமான சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல், வடகிழக்கு மாநிலங்களின் தன்மை பற்றி குத்துமதிப்பாக உணர வைத்திருக்கிறார்கள். டெல்லியில் சாதாரண இன்ஸ்பெக்டரான ஹாதிராமுக்கு ஒரு மிஸ்ஸிங் கேஸ் வருகிறது. அதே நேரம் நாகாலாந்து பிஸினஸ் மாநாட்டுக்குக் கலந்து கொள்ள வந்திருக்கும் நாகாலாந்தின் மிக முக்கிய மாநிலத் தலைவர் ஹோட்டலில் தலை வெட்டப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். இதனை விசாரிக்கும் பொறுப்பு துணை கமிஷ்னர் அன்வரிடம் வருகிறது. அன்வர், ஐபிஎஸ் அதிகாரி ஆகும் முன் ஹாதிராமிடம் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர். அமைதியான, நேர்மையான, அழுத்தமான, சிஸ்டத்தின் நீக்கு போக்கு தெரிந்த இளம் அதிகாரி.

ஏதோ ஒரு வகையில் ஆள் மிஸ்ஸிங் கேசும், நாகா தலைவர் கொலை வழக்கும் இணைகிறது. அன்வர், ஹாதிராமை தனது டீமில் சேர்த்துக் கொண்டு இந்த வழக்கைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார். மொத்த கதையும், அரசாங்க சிஸ்டம் Vs சாதாரண மனிதனின் அறம் என்று போகும். முதல் பாகத்தில் மறக்கமுடியாத வசனம் வரும். “இந்த சிஸ்டம் என்பது பல நூறு வருடம் பழைமையான, துரு பிடித்த, ஆயிரக்கணக்கான பாகங்கள் இருக்கும் மிகப்பெரிய இயந்திரம். ஏதோ ஒரு நம்பிக்கையில் அது மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் எதாவது ஒரு பழைய பாகத்தை எடுத்துவிட்டு அதற்கு பதில் புத்தம்புது பாகத்தைப் பொருத்தினால் அந்தப் புதிய பாகம் வேகமாக வேலை செய்யும். ஆனால் அதன் வேகத்துக்கு மற்ற பாகங்கள் ஈடுகொடுக்க முடியாது. இதனால் மொத்த இயந்திரமும் பாதிக்கப்படும். அப்போது புதிய பாகத்தை இயந்திரத்தில் இருந்து அகற்றுவது தான் சரியான முடிவு” என்று சொல்லியிருப்பாங்க. ஹாதிராம் மொத்த சிஸ்டத்தில் பொருத்தப்பட்ட புதிய பாகம் போல. அவரால் அதோடு ஒட்ட முடியாது. அதே போல விட்டு விலகவும் முடியாது.

இந்த சீஸனில் நான்கு காவல்துறை அதிகாரிகள் பாத்திரங்கள் வருகின்றன. நான்கு பேரும் நான்கு வகை. அனைவருக்குமே தவறைத் திருத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை அணுகும் விதம் மாறும். அவரவர் நியாயம். ஒரு சீனியர் அதிகாரி ஹாதிராமிடம் கூறுவார், “இந்த சிஸ்டம் ஒரு ஓட்டைக் கப்பல். இதில் உன்னைப் போன்றவர்கள் அந்த ஓட்டையை அடைக்க பாடுபடுகிறீர்கள். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள பாடுபடுகிறேன். இதான் வித்தியாசம்” என்பார்.

ஹாதிராம் உயிரைப் பணயம் வைத்து ஒரு போதைபொருள் கும்பலைப் பிடிக்க உதவுவார். பிறகு அது பற்றிய செய்தியில், நார்கோடிக்ஸ் உயர் அதிகாரி அந்தக் குற்றத்தைக் கண்டுபிடிப்பதில் பெயர் வாங்கிக் கொண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பார். இதை மூக்கில் குத்துபட்டு ஓரமாக உட்கார்ந்திருக்கும் ஹாதிராம், பக்கத்தில் வந்து உட்காரும் அன்வரிடம், “நாம எல்லாம் ரேஸ்ல ஓடும் குதிரைகள் போல. எவ்வளவு வேகமா ஓடினாலும் அவார்டும் புகழும் நமக்கு மேல உக்காந்து ஓட்டுறவனுக்குத் தான் கிடைக்கும். ஓடுற குதிரைக்குக் கடைசி வரை கொள்ளு தான் கிடைக்கும்” என்பார்.

ஹாதிராமோட மனைவி கதாபாத்திரம் கவனிக்கப்பட வேண்டியது. ஹாதிராம் போல வேலை வேலை என்று வீட்டைக் கவனிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவரின் மனைவி. வீட்டின் பொருளாதார சிக்கலினால் கஷ்டப்படுவது, அதே சமயம் நேர்மையாக இருக்கும் கணவரையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது என்று இரண்டு எக்ஸ்ட்ரீம்களை பேலன்ஸ் செய்யும் சராசரி நடுத்தர குடும்பப் பெண்ணைப் பிரதிபலித்திருப்பார்.

ஒரு தருணத்தில் ஹாதிராமுக்கு இரண்டு கோடி பணம் கிடைக்கும். அதை அப்படியே மொத்தமாக எடுத்துக் கொண்டாலும் அது பற்றி யாருக்கும் தெரியப்போவதில்லை, யாரும் கேட்கப் போவதில்லை என்றாலும் கூட அதில் வெறும் ஐந்து லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சப் பணத்தை துச்சமாக ஒதுக்கி, அந்த ஐந்து லட்சத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தரும் மனநிலையே இலட்சியவாதம் தரும் மகத்தான போதை.

கற்பனை என்றாலும் இது போன்ற கதைகள் தொடர்ந்து சொல்லப்படவேண்டும்.

ஜானகிராமன் நா

(Paatal Lok, Season 2, Hindi – Amazon Prime – தமிழ் டப்பிங்கும் உள்ளது).