Shadow

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

Pacific Rim: Uprising movie review

பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே!

கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC – Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவரை ஆராய்ச்சியின் பொழுது ஒரு கைஜு தன்வயப்படுத்திவிடும்).

கெய்ஸ்லர் செய்த குளறுபடியால், மூன்று புதிய கைஜுகள் மீண்டும் உலகத்திற்குள் நுழைந்து விடும். பி.பி.டி.சி.யும் நிர்மூலமாகிவிட்ட நிலையில், எப்படி கைஜுகளின் தாக்குதலில் இருந்து மனித இனம் தப்பியது என்பதுதான் படத்தின் கதை.

அதி கோரமான வேற்றுக் கிரக உயிரினத்திற்கும், மனிதர்களால் இயக்கப்படும் மிகப் பெரும் இயந்திரங்களுக்கும் நடக்கும் சண்டை என இப்படத்தின் கதையை ஒரு வரியில் சுருக்கலாம். மிக மாறுபட்ட கோணத்தில் இருந்து படம் அற்புதமாகத் தொடங்கி, முதல்பாகத்தின் கதைக்களத்திற்கு வந்து சேருகிறது.

கைஜுவாகட்டும், ஜேகர்களாட்டும், ரசிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரியதாய் அசுரத்தனமாய் உள்ளன. அத்தகைய பிரம்மாண்ட கற்பனை ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விஷுவலாய் ஒரு நெருடலாய்த் தருகின்றன. அவை இரண்டும் சண்டையிடுகிறேன் என வானுயர கட்டடங்களைச் சீட்டுக்கட்டு போல் சரிப்பதைச் சுத்தமாக ரசிக்க முடியவில்லை.

படத்தின் நாயகனாக ஜான் போயேகா நடித்துள்ளார். கெய்லி ஸ்பானி என்பவர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். படத்தின் இயக்குநர் ஸ்டீவன் டிநைட்-க்கும் இதுவே முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கதாசிரியராக அவர் வெற்றி பெற்றுள்ளார் என்ற பொழுதிலும், விஷுவலாம அதைப் பிரதிபலிப்பதில் இடறியுள்ளார்.

வேற்றுக்கிரக உயிரினித்தைப் பார்த்தாலே லஜ்ஜை ஏற்பட வேண்டுமெனத் திட்டமிட்டு, எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக, கைஜுவின் உருவத்தை டிசைன் செய்யப் பிரயனத்தனப்பட்டார் பசிஃபிக் ரிம் (2013) படத்தின் இயக்குநர் ஜியர்மோ டெல் டாரோ (Guillermo Del Toro). இந்தப் படத்தில் மூன்றே மூன்று கைஜுக்கள் தான், அதுவும் ஒன்றிணைந்து கரடுமுரடான ராட்சஷ கைஜுவாக உருவெடுக்கும். இவையும் பெரிதாக மனதில் பதிய மறுக்கிறது. ஆதலால், ஒரு வீடியோ கேம் பார்க்கும் உணர்வையே தருகின்றது படம்.