தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர்.
கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, ‘மணிரத்னம் இஸ் பேக்டா (backda)’ என்ற பரவச குரல்களைக் கேட்க முடிகிறது.
ஆனால், முதல் பாதி அளவு இரண்டாம் பாதி அவ்வளவு கோர்வையாக இல்லை. காட்சிகளுக்கிடையே ஜம்ப்பும், கதையை நகர்த்துவதில் ஓர் அவசரமும் தொற்றிக் கொள்கிறது. அடியாட்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, கதவுக்குப் பின்னால் இருக்கும் அரவிந்த் சுவாமியைப் பார்க்காமலேயே, அவர் இருக்கும் திசையை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். ஆனால் அதற்கு அடுத்த காட்சியில், கண்ணெதிரே நிற்கும் அவரைக் கொல்ல, கையில் அரிவாளைத் தூக்கிக் கொண்டு அடியாட்கள் வெட்ட ஓடுகின்றனர். அவர் அனைவரையும் அடித்துத் துவம்சம் செய்கிறார். அந்த அடியாட்களை அனுப்பும் எஸ்.டி.ஆர், ஜுங்கா போல் கஞ்ச டான் கூட இல்லை. ஏவுகணைகளை விற்கும் ஹை-ஃப்ரொஃபைல் க்ரிமினல்.
மூன்று பாத்திரங்களின் பலம் என்ன, அவர்கள் ஒருவரை ஒருவர் ஏய்க்கத் தங்கள் தனித் திறமைகளை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்ற டீட்டெயிலிங் இல்லை. வந்தார்கள், வென்றார்கள் என்பது போல் அருண் விஜயும் எஸ்.டி.ஆரும் செயல்படுகிறார்கள். சிவாஜி படத்தில், சுமனின் அடியாட்களைத் தன் பக்கம் கவர்ந்திழுப்பார் ரஜினி. இப்படத்திலும் அப்படியொரு காட்சி. எப்படியென்றால், துபாய் கதை சொல்லி, ‘என் பக்கம் வாங்க’ என்கிறார் அருண் விஜய். அவ்வளவுதான்! அதாவது, நடப்பதோ வாரிசு அதிகாரத்துக்கான வெறித்தனமான யுத்தம். அருண் விஜய், தன்னைக் கொல்ல வரும் அடியாட்கள் சுடமாட்டார்கள் என எப்படியோ உணர்ந்து கொண்டு எந்தப் பாதுகாப்புமின்றிப் பப்பரப்பாவென அமர்ந்துள்ளார். அரவிந்த் சுவாமியின் அடியாட்களிடம், ‘உங்களுக்கு வரதன் தர்றதை விட ரெண்டு மிட்டாய் அதிகமா தர்றேன்’ என்கிறார். ‘அடடே, இந்த டீலிங் பிடிச்சிருக்கு!’ என அவர்களும் கூட்டமாகக் கட்சி மாறுகின்றனர்.
டீட்டெயிலிங்கில் பிரதான கதாபாத்திரங்கள் மூன்றும் சோடை போய்விட, இன்ஸ்பெக்டர் ரசூல் இப்ராஹிமாக வரும் விஜய் சேதுபதி, தனக்கேயுரிய பாணியையும் மாடுலேஷனையும் கைவிடாமல் அடித்து தூள் கிளப்பியுள்ளார். படத்தின் கலகலப்பிற்குத் தொடக்கம் முதலே உத்திரவாதம் அளிக்கிறார். மணிரத்னத்தின் டெம்ப்ளட் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி ஈர்க்க, ஜோதிகாவும் டயானா எரப்பாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விடுகின்றனர். மற்ற சகோதரர்களாவது தங்கள் ஜோடிகளுடன் அன்னியோன்யமாக இருப்பது போல் காட்டியுள்ளார் மணிரத்னம். அருண் விஜய்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் என்ன பிணக்கு என்றே தெரியவில்லை! மற்ற ஜோடிகள் போல் பச்சக் என ஒட்டி உறவாடாமல் சிடுசிடுவென்றே உள்ளனர்.
படத்தின் மீதொரு மையலும் சாயலும் ஏற்பட ஏ.ஆர்.ரஹ்மானும், சந்தோஷ் சிவனும் பொறுப்பேற்றுள்ளனர். அந்த மேஜிக் கூடத் திரையில் இல்லாவிட்டால், பின்னென்ன மணி படம்!! மணிரத்னத்திற்குத் திரைக்கதையில் உதவியுள்ள சிவானந்த், ஜோதிகாவின் அப்பாவாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னைச் சகுனியின் கதாபாத்திரத்தோடு பொருத்திக் கொண்டாலும், திருதுராஷ்ட்ரனான சேனாபதி மீது விசுவாசமும் பாசமும் உடையவராகத் தன் கேரக்டரை மாற்றிக் கொண்டுள்ளார். படம் பார்க்கும் பொழுது எந்தக் குறையும் மனதிற்கு உறைக்காத வண்ணம் கொண்டு போயுள்ளதுதான் மணிரத்னம் – சிவானந்த் இணையின் பலம். காரின் பின் சீட்டில் அமர்ந்தவாறு பயணிக்கும் பிரகாஷ்ராஜின் எளிமையான அறிமுகம் தவிர்த்துப் படத்தில் மாஸ் மொமன்ட்ஸ் என எதுவும் இல்லாதது மிகப் பெரும் குறை. முதல் பாதி கிளாஸும், இரண்டாம் பாதியின் கோர்வையற்ற திடீர் திடீர் ட்விஸ்ட்களும் தான் படத்தைப் போரடிக்க விடாமல் தடுக்கும் காரணிகள்.
செக்கச்சிவந்த வானம், ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கும், ஒரு குடும்பத்தின் வீழ்ச்சிக்கும் சாட்சியாக உள்ளது. வானத்தின் சிகப்பு கலைவது போல், கண் முன் நிகழ்ந்த மனித உறவுகளின் வீழ்ச்சியால் பாதிக்கப்படாமல் பார்வையாளர்களும் கலைகின்றனர்.