
‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டத்தினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷாம்நாத் நாக் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாகத் தங்களின் பிரத்தியேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்களும், ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.