Search

Portrait of a Lady on Fire விமர்சனம்

portrait-of-a-lady-on-fire

மனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் படம் ஒரு கவிதையாக உணர்த்துகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் (2019) பெற்றது உட்பட, பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்த ஃப்ரெஞ்ச் மொழிப்படம். ஒரு பெண் இயக்குநரின் படம், கான்ஸ்-இன் Queer Palm விருதினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

கோமாட்டி ஹெலூயிஸை ஓவியமாக வரைய, பிரட்டானி தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு தீவு ஒன்றுக்கு வரவழைக்கப்படுகிறாள் ஓவியை மரியேன். அந்த ஓவியத்தை மிலனிலுள்ள கோமான் ஒருவனுக்கு அனுப்பித் திருமணத்திற்குச் சம்மதம் பெறுவதே ஹெலூயிஸினுடைய அம்மாவின் திட்டம். திருமணத்தில் விருப்பமில்லாத ஹெலோயிஸ் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறாள். ஆக, அவளுக்குத் தெரியாமலேயே, ஹெலூயிஸை ஓவியமாக வரைவதுதான் மரியேனுக்கு முன்னுள்ள சவால். அப்பொழுது அவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை.

புன்னகையை இழந்துவிட்ட பெண் ஹெலூயிஸ். கான்வென்ட்டில் வளரும் அவள், தனது அக்காவின் மரணத்திற்காக வீட்டிற்கு வருகிறாள். அக்காவிற்குப் பார்த்த கோமானைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அம்மாவால் வற்புறுத்தப்படுகிறாள். இங்கே, கான்வென்ட் என்பது கன்னிகாஸ்த்ரீகளுக்கான மடம். கதை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடக்கிறது.

ஹெலூயிஸ், கன்னிகாஸ்த்ரீ ஆகும் முடிவும் அவளுடையது அல்ல. ஒருவரை தேவனுக்குப் பிரியமான புனிதராக்குவதன் முதல் அம்சம், சிறகுகளை ஒட்ட நறுக்கி சுதந்திரத்தைப் பறித்தலே ஆகும். அக்கா தற்கொலை செய்து கொள்வதால், திருமண பந்தத்தில் தள்ளப்படுகிறாள் ஹெலூயிஸ். அதாவது ஒரு சிறைச்சாலையில் இருந்து இன்னொரு சிறைச்சாலைக்கு மாற்றப்படுகிறாள். ஹெலூயிஸ்க்கு முடிவெடுக்கும் சுதந்திரமே வழங்கப்படாத இறுக்கம், தன்னையொரு கைதியாக அவளை உணர வைக்கிறது.

கடலை நோக்கி வேகமாக ஓடும் ஹெலூயிஸ், தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாளோ என சந்தேகப்படுகிறாள் ஓவியை மெரியன்.

ஆனால் ஹெலூயிஸோ, “எனக்கு இப்படி ஓடணும்னு ரொம்ப நாள் ஆசை” என்கிறாள். மிகச் சின்ன விஷயங்கள் கூட மறுக்கப்படும் சிறைப்பறவையாய்த் தவிக்கிறாள் கோமாட்டி. தனிமையாய் இருப்பதும், சுதந்திரமாய் இருப்பதும் வேறு வேறு என ஓவியைக்குப் புரிய வைக்கிறாள் ஹெலூயிஸ். அதன் உச்சகட்டமாக, ஓவியைக்குக் கலை என்றால் என்னவென்றும் உணர்த்துகிறாள்.

“உயிரற்ற ஓவியம் அழகாக இருந்தென்ன பயன்? எனது ஆழமான அகத்தை நீ வரைந்த ஓவியம் பிரதிபலிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு மரியேனைத் தடுமாறச் செய்கிறது.

கலையைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தின் மையக் கதை அளவுக்கு, படத்தில் இழையோடும் கிளைக் கதையும் மிக முக்கியமானது. கிரேக்கக் கடவுள் அப்போலோவின் மகனான ஆர்ஃபியஸ் என்பவன் கிரேக்கத் தொன்மவியலில் வரும் ஒப்பற்ற இசைக் கலைஞன். அவன் தனது யாழ் போன்ற இசைக்கருவியை மீட்டிப் பாடத் தொடங்கினால், அதற்கு மயங்காத தேவரோ, மனிதர்களோ, மிருகங்களோ இல்லை. தனது இசையால் எதையும் கரைக்க வல்ல திறமைசாலி. பாம்பு கடித்து அவனது காதல் மனைவி யுரிடிஸ் (Eurydice) இறந்துவிட, அவளை மீட்கப் பாதாள லோகம் செல்கிறான் ஆர்ஃபியஸ். தனது இசையினால் ஹேடஸை (மரண தேவன்) வசியம் செய்து, தனது மனைவியை ஒப்படைக்குமாறு கோருகிறான் ஆர்ஃபியஸ். அதற்கு ஒப்புக் கொள்ளும் ஹேடஸ், ‘பூமியை அடையும் வரை, நீ திரும்பிப் பார்க்கக் கூடாது’ என்றொரு கட்டளையிடுகிறார். பூமியை அடையும் சமயத்தில், ‘ஒருவேளை ஹேடஸ் நம்மை ஏமாற்றப் பார்க்கிறாரோ? யுரிடிஸை மீண்டும் இழந்து விடுவோமோ?’ எனத் திரும்பிப் பார்த்து விடுறான் ஆர்ஃபியஸ். யுரிடிஸ் இனி உயிருடன் திரும்ப வாய்ப்பே இல்லாமல் போகிறது.

ஆர்ஃபியஸின் காதல் உண்மையானதா எனக் கேள்வியெழுகிறது.

அதற்கு, “ஆர்ஃபியஸ், யுரிடிஸ் மீது வைத்துள்ள பெருங்காதல் அவனைத் தடுமாறச் செய்கிறது” என்கிறாள் ஹெலூயிஸ்.

ஓவியை மரியேனோ, “அவன் தடுமாறவில்லை. ஒரு காதலனாக இல்லாமல், ஒரு கவிஞனாக முடிவெடுத்து, அவளது நினைவுகளோடு வாழத் தீர்மானிக்கிறது அவனது படைப்பு மனம்” என்கிறாள்.

“ஒருவேளை, அது ஆர்ஃபியஸீன் முடிவாக இல்லாமல், யுரிடிஸின் முடிவாகக் கூட இருக்கலாம். அவனை, அவள் திரும்பிப் பார்க்கச் சொல்லியிருக்கலாம்” என்கிறாள் ஹெலூயிஸ்.

தங்கள் இருவருக்குள் ஏற்படும் நிச்சயமற்ற நிலையற்ற உறவின் சூழலிலிருந்து விடுபடவும் சமாதானமாகவும், தங்கள் காதலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு ஆர்ஃபியஸ் – யுரிடிஸ் கதை உதவுகிறது. ‘கடைசியாகத் திரும்பிப் பார்த்தல் (உட்குறியீடாக, எப்பொழுதும் காதலின் நினைவிலேயே திளைத்தல்)’ என்பதைக் கிரேக்கத் தொன்மத்தில் இருந்து அழகாக எடுத்துக் கையாண்டுள்ளார் இயக்குநர் செலின் சியாமா. அவருக்குப் பெரும் உறுதுணையாக இருந்து, படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் மிகக் கவனமாகச் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் க்ளெயிர் மேதோன்.

எழுத்தாகட்டும், இசையாகட்டும், ஓவியமாகட்டும் அல்லது எந்த ஒரு கலை வடிவமாகட்டும், அது, காதலின் நினைவுகளோடு வாழ, மனிதர்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதம்.

Eurydice-Orpheus-Marianne