இது ஒரு தமிழ்ப்படமே! அதுவும் 88 நிமிடங்கள் மட்டுமே ஓடி, பார்வையாளர்கள் நேரத்தை மிகவும் மதிக்கிறது. மூன்று பாகங்கள் கொண்ட படத்தின், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, இந்தியாவின் முதல் சோஃபமோர் (Sophomore) திரைப்படம் என உரிமை கோரியுள்ளனர்.
பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படித்த ராம்க்கு, சரியான வேலை கிடைக்காததால், படுக்கையில் அசைய முடியாமல் இருக்கும் ஒரு மருத்துவரைக் கண்காணிக்கும் வேலையில் சேருகிறான். மருத்துவரின் கண்டுபிடிப்பான ஒரு மருந்திற்கான தேவையைத் (demand) தெரிந்து கொள்ளும், அதன் மூலம் அதீதமாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறான். அவனிடமுள்ள பணத்தை அபகரிக்க நினைக்கிறாள் சமையல் வேலை செய்யும் பஞ்சவர்ணம். அந்த மருந்திற்கான ஃபார்முலாவைத் தேடியவாறு உள்ளார் பிசியோதெரபிஸ்ட்டாக அவ்வீட்டிற்கு வரும் மருத்துவரின் உதவியாள். பணமும் ஃபார்முலாவும் யாருக்குக் கிடைத்தது என்பதே படத்தின் கதை.
வேலையில்லாமல் அல்லலுறும் ராமின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. ஹிஸ்டிரியா வந்தது போன்ற அவரது அவஸ்தையை கத்திரி போட்டு, படத்தொகுப்பாளர் தினேஷ் காந்தி நேராகக் கதைக்குள் சென்றிருக்கலாம். மருத்துவராக சாம்ஸ் நடித்துள்ளார். வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் தோன்றியுள்ளார். படுத்த படுக்கையாக ராம்ஜி நடித்துள்ளார். நல்ல அழகானதொரு ட்விஸ்ட்டுடன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டும்விதமாகப் படத்தை முடுத்துள்ளார் இயக்குநர் வினோ. அவர், ‘மங்கை மான்விழி அம்புகள்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது, பஞ்சவர்ணம் என்ற கதாபாத்திர வார்ப்புத்தான். வசுதா கிருஷ்ணமூர்த்தி மிக நன்றாக நடித்துள்ளார். அவரது வசன உச்சரிப்பும் ரசிக்கும்படி உள்ளது. பெரும்பாலும் ஒரு வீட்டுக்குள் மட்டுமே நிகழும் கதையை மிக நேர்த்தியாக்க் காட்சிப்படுத்தியுள்ளார், பட்த்தின் பலமாக உள்ள ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த். சுமா2 12 மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ள சிபு சுகுமாரனின் முதல் தமிழ்ப்படமிது. நாயகன் ராமாகப் படத்தைத் தயாரித்துள்ள ஸ்ரீ நடித்துள்ளார். வித்தியாசமானதொரு முயற்சியில் துணிந்து இறங்கியதற்கு அவரைப் பாராட்டலாம்.
இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, முதற்பாகம் வெளியிடப்படுவதுதான் சோஃபமோர் திரைப்படம் என்றால், 2016 இல் வந்த சதுரம் 2 படத்திற்கும் அது பொருந்தும்.