Shadow

ஜாஸ்பர் விமர்சனம்

தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர்.

அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.

ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. அதற்குக் காரணம் அவருக்கு CIPA எனும் நரம்பியல் ஒழுங்கின்மை இருப்பதாக அறிவியல்பூர்வமாகச் சொல்லப்படுகிறது. அது எத்தகைய பாதிப்பை மனிதனுக்கு அளிக்கிறது என்ற டீட்டெயிலிங்கில் கவனம் செலுத்தாமல், மிக மேலோட்டமாக அணுகியுள்ளார் இயாக்குநர் யுவராஜ். D.

சாத்தானின் சக்தியைப் பெற்ற வில்லனாக பாஸ்டர் பாத்திரத்தில் நடித்துள்ளார் ராக் கலேஷ். வயது முதிர்ந்த மிஸ்டர் ஜே-வாக, உணர்ச்சிகளற்ற முகமாக C.M.பாலா நடித்துள்ளார். அவரது கம்பீரம், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்குப் பொருந்தினாலும், மனதில் பதியுமளவு காட்சியமைப்புகள் உதவவில்லை.

வாலிப வயது ஜாஸ்பரகாவும், வங்கி மேலாளர் ஹரீஷாகவும் விவேக் ராஜகோபால் நடித்துள்ளார். ஒரு பாத்திரத்தில் அடிதடியில் ஈடுபடும் தாதாவாகவும், மற்றொரு பாத்திரத்தில் குடும்பத்திற்காக மருகும் நபராகவும் வருகிறார். இவர், வாலிப வயது ஜாஸ்பராக இருக்கும்போது ஐஸ்வர்யா தத்தா ஜோடியாகவும், ஹரீஷாக வரும்போது அறிமுக நடிகை லாவண்யா ஜோடியாகவும் நடித்துள்ளனர். டிரம்ஸ் சிவமணியின் மகன், குமரன் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

வலிகளை உணராத ஹிட்மேன் மிஸ்டர் ஜே-வுக்கும், சாத்தானை வழிபடும் வில்லனுக்குமான க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளிலும் கூட பட்ஜெட் பிரதிபலிக்கிறது.

(*CIPA – Congenital Insensitivity to Pain with Anhidrosis)