
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்த்தக்கது.
புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1, ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் மெய்சிலிர்க்க வைக்கும் தீவிரமான பயணத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன், செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் நடைபெற்றுவரும் செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யத்தைத் தகர்க்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளில், நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறை இது சித்தரிக்கிறது. விறுவிறுப்பான இந்தக் கதைக்களம், நல்லது அல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க இயலாத ஒரு சுழலுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. அங்கே தீய மனிதர்கள் என்று ஒருவருமில்லை, அவர்கள் அனைவருமே பல்வேறு சாயல் கொண்ட கதாநாயகர்கள்தான்.
“சாகசக்காட்சிகள் நிறைந்த புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 பொழுதுபோக்குத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்கை) பிரைம் வீடியோவில், வெளியிடுவதன் மூலம் இந்தப் புதிய வருடத்திற்கான ஒரு நற்தொடக்கத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து நாங்கள் உற்சாகமாக உள்ளோம். இத்திரைப்படம் தொடக்கத்திலிருந்து இறுதி வரை எங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் என்பது உறுதி” என்று இந்தியாவின் ப்ரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர் மெங்க்னானி கூறினார்.
திரைப்படத்தை எழுதி இயக்கிய சுகுமார், “முதலில், இப்படத்திற்கு அன்பையும் ஆதரவையும் நல்கி, படத்தை ஒரு வெற்றிக் காவியமாக ஆக்கியதற்காக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், என் மனப்பூர்வமான நன்றியயைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடும் போட்டி நிலவும் சந்தன செம்மரக்கட்டை கடத்தல் உலகத்தினூடே பார்வையாளர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாகவே என் மனதை ஆக்கிரமித்திருந்தது. இந்தத் திரைப்படம், நன்மை, தீமை என்ற விழுமியங்களைத் தாண்டி, அதை விட்டு விலகிச்சென்று, மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சாகச அனுபவமாக இருக்கும்” என்றார்.
அல்லு அர்ஜூன், “கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை, பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் மற்றும் நுட்பமான உணர்வுகள் மிகவும் தனித்துவமானவை. கூடவே, இத்தகைய பாத்திரம் இதற்கு முன் நான் செய்யாதது. ப்ரைம் வீடியோ மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் இந்தத் திரைப்படம் சென்றடையப் போகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக உள்ளேன்” என்றார்.
ராஷ்மிகா மந்தனா, “பார்வையாளர்கள் இந்தத் திரைப்படத்தை மிக உயர்வாகப் பாராட்டுவதைக் காணும்போது, மாதக்கணக்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறேன். அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹத் ஃபாசில் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என் கேரியரில் மிக முக்கியமான ஒரு விஷயம்” என்றார்.
தெலுங்கு திரைப்படத்தில் தன் அறிமுகம் குறித்துப் பகிர்ந்த ஃபஹத் ஃபாசில், “தெலுங்கு திரைப்படத்துறையில் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 எனது அறிமுகத்தை மிகச்சிறப்பான ஒன்றாகச் செய்திருக்கிறது. என் பாத்திரம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து, அதன் தோற்றம், வசனங்கள், மற்றும் சண்டைக் காட்சி வரிசைகள் என ஒவ்வொரு கூறுகளும் கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது” என்றார்.