Search

#PV999 – பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது, “என் கணவர் நடித்ததால் என்று மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் தான். படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது.

இந்தப் படம் பார்த்த பிறகு பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும். நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும். யாராவது படத்தைப் பார்த்த ஒரு பெண் யோசித்துத் திருந்தினால் அதுவே இந்தப் படத்தின் வெற்றி.

என் கணவரின் பாத்திரம் பற்றி முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. பிறகு படத்திற்காகச் சமாதானம் ஆனேன்” என்றார்.

இந்திரஜா ரோபோ சங்கர், “முதலில் படத்தின் தலைப்பே ஆர்வமூட்டியது. படக்குழுவினர் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள். பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பது என்பது சுலபமல்ல” என்றார்

நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட், “இங்கே வந்தபோது பிரபஞ்சன் எழுதிய ‘பெண்’ என்கிற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அதன் மூலம் எதுவோ சொல்ல விரும்புகிறார்கள் என்றே நினைத்தேன். இப்படம் பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் ஒரு வகையில் எனக்குத் தம்பி. ஒருவகையில் எனக்கு ரோல்மாடல். அவன் எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பான். எங்கே தான் இப்படி ஓடுகிறான் என்று நினைப்பேன். இப்போது புரிகிறது சரியான இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறான் என்று. அவன் மேலும் வளர்வான்.

சில படங்கள் ஓடுகின்றன. சில படங்கள் ஓடுவதில்லை. காரணம் சினிமாவிலும் தலைமுறை இடைவெளி வந்துவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது” என்றார்.

கதா நாயகனாக நடித்துள்ள ராஜ் கமல், “முதலில் கன்னட நடன இயக்குநர் சதீஷ் அவர்களுக்கு என் நன்றி. ஏனென்றால் அவர் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இயக்குநரிடம் கதை கேட்கப் போகவில்லை. வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அப்படித்தான் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தில் நடித்தபோது இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம்.

நான் டிவி நடிகன் என்று என்னை ஒதுக்காமல் இயக்குநர் எல்லாமே நடிப்புதான் என்று என்னை ஏற்றுக் கொண்டு நடிக்க வைத்ததற்கு நன்றி. எந்த சமரசமும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தினார். தான் விரும்பிய காட்சிகளைத்தான் எடுத்தார்” என்றார்.

நடன இயக்குநர் அர்ச்சனா பேசும்போது, “இந்தப் படத்தின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு இசையிலும் சரி காட்சிகளிலும் சரி நன்றாக அமைந்துள்ளது. நாங்கள் காட்சி நன்றாக அமைய வேண்டுமென்று ரிஸ்கான மலைப்பகுதியில் அபாயகரமான இடங்களுக்கெல்லாம் சென்று எடுக்க விரும்பினோம். நடித்தவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நடித்துக் கொடுத்து அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாடல் காட்சிகளைப் பார்த்தால் உங்களுக்கும் தெரியும். எங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாதது” என்றார்.

இப்படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ், “இந்தப் படத்தை ஆரம்பித்து PV 999 என்று ஹேஷ்டாக் செய்தபோது விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் நல்ல வகையில் அது மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தந்த அந்த ஊக்கத்தில் தான் முழுப் படமாக எடுத்து முடித்திருக்கிறோம். இப்போது அதை வெளியிடுகிறோம். கதாநாயகன் ராஜ்கமல் தொலைக்காட்சி, விளம்பரங்கள் என்று பரவலாக அறியப்பட்டவர். இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருந்ததால் எவ்வளவோ சர்ச்சைகளையும் தாண்டிப் படம் தயாராகி இதோ வெளியீட்டுக்கே வந்திருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எத்தனையோ படங்கள் பேசலாம். இதுவரைக்கும் வந்த படங்களில் இது ஐகானிக் படம் என்று சொல்லலாம். RRR படம் அறிவித்துள்ள அதே 7 ஆம் தேதியில் இந்தப் படம் வெளியாகிறது. அதே நாளில் படம் மீது உள்ள நம்பிக்கையில் வெளியிடுகிறோம்” என்றார்.