Shadow

ராஜபுத்திரன் – சிண்டிகேட் சதியில் சிக்கிய பாசக்காரன்

கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். இந்த நிலையில், ‘ராஜபுத்திரன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர். காரணம், ‘இப்படி ஒரு நல்ல படம் எடுத்தும் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை’ என்பது தான். மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரம்மாண்டமான முறையில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, தந்தை – மகன் இடையிலான பந்தத்தைக் கொண்டாடும் வகையில் சொல்லியிருக்கும் இப்படத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்.

டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் என்று தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளும், உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் படங்களும் தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல படமாக இருப்பதாகப் படம் பார்த்த மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அப்பா – மகன் இடையிலான பாசப்பினைப்பை சொல்லும் படமான இதில் இளைய திலகம் பிரபு மற்றும் எதார்த்த நாயகன் வெற்றி அப்பா – மகன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணபிரியா நாயகியாக நடிக்க, பிரபல கன்னட நடிகர் கோமல் குமார் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இது போன்ற நல்ல படங்களைப் பார்க்க மக்கள் தயாராக இருந்தாலும், சரியான திரையரங்கம் மற்றும் காட்சிகள் ‘ராஜபுத்திரன்’ படத்திற்குக் கிடைக்காமல் போனதால் ரசிகர்கள் பலர் படம் பார்க்கச் சென்று, படம் திரையரங்குகளில் ஓடாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சம்பவங்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்கிறது. ’ராஜபுத்திரன் படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளை அதிகரிக்கப்பட்டால் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் வரிசையில் எங்கள் படமும் நிச்சயம் இணையும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது. நல்ல படங்களைத் திரையரங்கிற்கு சென்று பார்க்க மக்கள் தயாராக இருந்தாலும், திரையரங்குகள் ஒதுக்குவதில் இருக்கும் அரசியல் மற்றும் சிண்டிகேட் பின்னணியால் ‘ராஜபுத்திரன்’ போன்ற படங்கள் பெரும் சிக்கலைச் சந்திக்கும் சூழ்நிலை மாறவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்த் திரையுலகம் மீண்டும் பொற்காலத்திற்குத் திரும்பும்.