Shadow

அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தைக் கன்னடத் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டன்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ், “இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காகத் தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.

படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களைக் கவரும்” என்றார்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், “என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலைப் பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்தப் படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, “உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை” என்றார்.

நடிகை ஜான்விகா, “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களைத் தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்குத் தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்” என்றார்.

நடிகர் அஜ்மல், “இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தைச் சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை. உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். ட்ரெய்லர் மிரட்டுகிறது. மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன், “எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் உதயா, “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25 ஆவது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்தப் படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன்” என்றார்.