Shadow

ராமம் ராகவம் – மகனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் பயணம்

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் தனராஜ், “கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் கை இதுவரை எனக்குத் துணையாக இருக்கு. அப்பாவாக 21 படங்கள் சமுத்திரக்கனி நடித்திருக்கிறாராம். படத்தின் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எனக்கு அப்பா இல்லை. இப்போ சமுத்திரக்கனி அப்பா இருக்காங்க. எனக்கு இந்தப் படம் குடும்பத்தைக் கொடுத்துச்சு. எனக்கு அம்மாவும் இல்லை. இப்போ இருக்காங்க. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம்” என்றார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ தெலுங்கில் எடுக்கப்பட்ட போது, அதில் சூரியின் பாத்திரத்தைச் செய்தவரிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, “தன்ராஜ் போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல கதை சொன்னான். கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், கதையைச் சொன்னான். ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என விமானம் கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் ராமம் ராகவம். இவன் கேட்டு வாங்கியிருக்கான். கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் போடா’ என்றேன். ‘அண்ண!!’ என்றான். ‘நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்” என்றார்.