Shadow

சாமி² விமர்சனம்

Saamy-square-movie-review

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும்.

சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுமையான வில்லன். உடற்பல பராக்கிரமத்தை மட்டும் நம்பும் வெற்றுக் கூச்சலில்லாதவர் பெருமாள் பிச்சை. அவருக்கு மாற்றாக ‘பிச்சை க்யூப்’ என மூன்று வில்லன்களை இறக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இளைய மகன் ராவணப் பிச்சையாக பாபி சிம்ஹா; மூத்த மகன் மகேந்திரப் பிச்சையாக ஓ.ஏ.கே.சுந்தர்; இடையில், தெய்வேந்திர பிச்சையாக ஜான் விஜய். ஆனால், கோபம், ஆவேசம், மூளை என அனைத்துமாக இருப்பது ராவண பிச்சை மட்டுமே! மிரட்டியுள்ளார்.

ஒரு சுவரில், யாருடைய படம் வரையப்படுகிறது என்பதில் இருந்து இங்கு அனைத்துமே அரசியல். அப்படியிருக்கும் பட்சத்தில் ஊரின் மத்தியில் வைக்கப்படும் ஒரு சிலையின் முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? இழந்த அதிகாரத்தை, அதன் மூலமாக விதைக்கப்பட வேண்டிய பயத்தை, ஒரே ஒரு சிலையை நிறுவி மீட்டெடுக்கிறார் ராவணப் பிச்சை. அப்புள்ளியில் தொடங்க வேண்டிய ஆடுபுலியாட்டம் அங்கேயே முற்றுப் பெறுவதாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் த்ரிஷா மாமிக்குச் சரியான மாற்றாக இல்லாததாலும், 28 வருடங்கள் கதை முன்னோக்கிச் செல்வதாலும், “சாமி” என்ற படத்துடனான கனெக்டிங் புள்ளி அறுபடுகிறது.

‘வெளில தான் ராம்சாமி, உள்ள ஆறுச்சாமி தான்’ என 3/4 படம் சென்ற பிறகு சொல்கிறார். ‘இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?’ என்பது போல் ஙொய்யென்றுள்ளது. ராம்சாமி படிச்சு முடிச்சு ஐ.பி.எஸ். ஆக திருநெல்வேலி வருவதற்குள் முதல் பாதி படமே முடிந்துவிடுகிறது. டெல்லி மண்ணில், ஆறுச்சாமி இல்லாமல் மிக அந்நியமாகப் புதிய படம் போன்று தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறது சாமி ஸ்கொயர். இப்படியாக ஹரியையும், ஆறுச்சாமியையும் படத்தில் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில், எரிச்சலை உண்டு பண்ணும் பயங்கர, அதி பயங்கர, சூர மொக்கை போட்டு, “ஷ்ஷ்ப்பாஆ, முடில சாமீ!” எனப் பார்வையாளர்களைக் கதற வைக்கிறார் சூரி. படத்தின் இன்னொரு பரிதாபமாய் வருகிறார் பிரபு.

சாமி படத்தில் வரும் ரசிக்க வைக்கும் மாஸ் மொமன்ட்டோ, அவ்வனுபவத்தை உயர்த்தும் பின்னணி இசையோ சாமி ஸ்கொயருக்கு வாய்க்கவில்லை. அதே போல் ஆறுச்சாமிக்கு வாய்த்த அழகானதொரு காதல் அத்தியாயமும், ராம்சாமிக்கு வாய்க்கவில்லை. தனக்கென்று எந்தத் தனித்துவமும் இன்றி, அதிரூபனான விக்ரமைக் காதலிப்பதே தன் வாழ்வின் லட்சியம் என்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

பேய்ப்படத்துக்கான கூறுகளைக் கொண்டுள்ளன சில காட்சிகள். நாயகன் மீது காவல்துறையினரின் உடை உரசினால், நாயகன் சாமியாடிவிடுகிறார். ‘நான் ராட்சசன்டா’ என வில்லன் கர்ஜிக்க, ‘நான் பேய்க்குப் பொறந்த பூதம்டா’ எனச் செவியில் ஓங்கி வசனத்தை உமிழ்கிறார் விக்ரம். கடுப்பாகும் அவரது உயரதிகாரி, “நாமெல்லாம் ஐ.பி.எஸ். ஆஃபீசர்ஸ். கொஞ்சம் பார்த்துச் செய்ங்க” என்கிறார் பணிவாக.

முதல் பாகத்துடன் ஒப்பிட்டு நோக்குவதால், சில குறைகள் உறுத்துகிறதே அன்றி, படத்தின் முதல் பாதி சாமி ஸ்கொயராகவும், இரண்டாம் பாதி சாமி 2 ஆகவும் தனித்தனியாக, இயக்குநர் ஹரி மேஜிக்கை உணரமுடிகிறது.