ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி பானு, பொம்மன் இரானி, விக்கி கெளஷல் மற்றும் பலர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானியின் ராஜ்குமார் ஹிரானி ஃப்லிம்ஸ் மற்றும் கெளரிகானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “டன்கி” ஆகும்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகும் படம் என்றாலே அப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. ஏனென்றால் அவரின் முந்தைய படைப்புகளான ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’, ‘லகோ ரகோ முன்னா பாய்’, ‘3 இடியட்ஸ்’, ‘பி.கே’ மற்றும் ‘சஞ்சு’ இவையெல்லாம் இந்தியத் திரையுலகிலும், இந்திய ரசிகர்கள் மனதிலும் ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது. அதுமட்டுமின்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் கிங் கான் ஷாருக் பதான், ஜவான் என தொடர்ச்சியாக இரண்டு மெகா ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்துவிட்டு ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்திருக்கும் படம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருந்தது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்.
கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதிலும், அதற்கான திரைக்கதையை அமைப்பதிலும், ஒட்டுமொத்த படத்தையும் பார்வையாளர்களின் மன உணர்வோடு பிணைப்பதிலும் ராஜ்குமார் ஹிரானி ஒரு மாஸ்டர் என்று சொன்னால் அது மிகையில்லை. அதை இந்த “டன்கி”-இலும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ஹிரானி.
”டன்கி” என்பது சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஒரு நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் வழிமுறையைக் குறிப்பதற்கான சொல். அத்துமீறி என்றால் தீவிரவாத நடவடிக்கைகளின்படி என்று பொருள் இல்லை. பஞ்சங்களின் போதும், நெருக்கடி நிலைகளின் போதும், போர் சூழலின் போதும் தங்கள் உயிரையும் தங்களைச் சார்ந்தவர்களின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள, முறையான விசா, பாஸ்போர்ட் போன்றவை இல்லாமல் கடல் மார்க்கமாகவோ அல்லது தரை மார்க்கமாகவோ, எல்லைக் கோடுகளில் துப்பாக்கி ரவைகளுடன் ரத்தம் குடிக்கக் காத்து நிற்கும் படை வீரர்களை மீறி உயிர் பிழைத்து வாழ்வதற்கான வழி தேடி, தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் பயண முயற்சிகள் எல்லாமே “டன்கி”-இல் அடங்கும். ஆக “டன்கி” என்னும் அந்தத் தலைப்புக்கான பொருளும் அதுதான், படத்தின் கதைக்கருவும் அதுதான்.
ஆனால் நம்நாட்டில் தான் அது போன்ற அசாதாரணமான சூழலோ (நெருக்கடி நிலை பிரகடனத்தைத் தவிர்த்து) பஞ்சங்களோ (ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், பண்டைய காலங்களில் ஏற்பட்ட பஞ்சம் ஆகியன தவிர்த்து) இல்லை போர் சூழலோ (இந்திய பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், மணிப்பூர் கலவரம் இப்படி இன்னும் சில சம்பவங்கள் தவிர்த்து) இல்லையே. இப்படியான சூழல்கள் இல்லாத போது நம் மக்களின் வாழ்வியலுடன் இந்த டன்கி பயணங்கள் எப்படி பொருந்தும் என்கின்ற கேள்வி வரலாம். நியாயம் தான்.
ஆனால் ஒரு படைப்பாளியாக இது போன்ற அசாதாரணமான சூழல்களில் மாட்டிக் கொண்டு தவிக்கும், பலியாகும், காணாமல் போகும் மக்களைப் பற்றிப் பேச வேண்டும், அவர்களின் வலியைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால், அதற்கான கதைக்கருவைக் கற்பனையாகக் கூட எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. ஆக இது யாருக்கு நடந்தது என்பது வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் நடந்ததாக, நடப்பதாக, நடக்க இருப்பதாகக் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் 200 சதவிகிதத்திற்கும் மேலான உண்மை என்பதை மனதில் நிறுத்திப் படத்தைப் பார்ப்பது பார்வையாளர்களாகிய நம் ரசனை வளர்வதற்கும், அதற்கும் மேலாக இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்த மக்களுக்கும், நாடு விட்டு நாடு வந்த மக்களுக்கும், கண்டம் விட்டு கண்டம் வந்த மக்களுக்கும் நலம் பயக்கும் என்பதாலும் இந்த விடயங்களைக் கருத்திலும் கண்ணிலும் வைத்துப் படத்தை அணுகுங்கள்.
நிற்க. மேற்பத்தியில் சொன்னது போன்று இப்படத்தின் கதைக்கரு முழுக் கற்பனை என்றும் சொல்ல இயலாது. ஏனென்றால் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் மேலை நாடுகள் என்று சொல்லக்கூடிய மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு எல்லா நாடுகளுமே மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலும், உச்சக்கட்ட உயிர்பலியிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த நேரம் அது. அந்தக் காலகட்டத்தில் கீழ்மட்ட தொழிலாளர்களுக்கான பணிகளைச் செய்வதற்கான தொழிலாளிகள் இல்லாமல் எல்லா நாடுகளும் தவித்தன. ஆதலால் பிற நாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாகக் கீழமை நாடுகளில் இருந்து மக்கள் வந்து தொழிலாளர்களாக வேலை செய்வதை பல நாடுகள் ஊக்குவித்து அவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கத் தொடங்கின. அதில் முக்கியமான நாடு இங்கிலாந்து. அந்தக் காலகட்டத்தில் அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கின்ற ஆசையுடனும் நம்பிக்கையுடனும் சட்டரீதியாகவும் சட்டத்திற்குப் புறம்பான முறையிலும் இடம்பெயர்ந்தார்கள். அதில் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து அதிகமான மக்கள் புலம் பெயர்ந்தார்கள் என்பதும் வரலாறு. “டன்கி”- திரைப்படத்தின் மையக்கதை நடப்பது பஞ்சாப் மாநிலத்தில். ஆக இந்தக் கதைக்கரு முழுக் கற்பனையும் அல்ல. இனி படக்கதை.
பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் மனு ரந்தாவா (டாப்ஸி) மற்றும் அவளுடைய இரண்டு தோழர்களுக்குப் பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள். அதைத் தீர்த்துக் கொள்ள இங்கிலாந்து செல்லலாம் என்று முடிவு செய்கிறார்கள். அதற்கு முறையான பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அந்த முயற்சியில் இருக்கும் போது ஹர்தயால் ஹார்டி சிங் (ஷாருக்கான்) எதிர்பாராத முறையில் அவர்களோடு வந்து சேருகிறார். அவர் மனுவின் குடும்பத்திற்கான நன்றிக்கடனாக மனுவையும் அவளின் தோழர்களையும் இங்கிலாந்து அனுப்பி வைக்கும் வரை அவர்களோடு இருந்து உதவுவதாக உறுதியளிக்கிறார். அதன்படி அவர்களுக்கு உதவவும் செய்கிறார். அப்பொழுது இங்கிலாந்து செல்வதற்கான அவர்களின் முயற்சியின் போது, அவர்களோடு சுகி (விக்கி கெளஷல்) வந்து இணைந்து கொள்கிறான். இந்த ஐவரும் இங்கிலாந்து செல்ல சட்டரீதியான எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள். அவை அனைத்தும் தோற்றுப் போக, அந்தத் தோல்வி அவர்களின் வாழ்க்கையை எப்படி பாதித்தது, அதைத் தொடர்ந்து அவர்கள் “டன்கி” வழியைத் தேர்ந்தெடுக்க எப்படி நிர்பந்திக்கப்பட்டார்கள், அவர்களின் டன்கி பயணம் வெற்றி அடைந்ததா, தோல்வி அடைந்ததா, அது அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதை விவரிக்கிறது “டன்கி” திரைப்படத்தின் திரைக்கதை.
இங்கிருக்கும் இயக்குநர்கள் எல்லாம் ஒரு கதையை உருப்படியாகச் சொல்வதற்கே தடுமாறிக் கொண்டிருக்க, ஹிரானியோ ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்கதை வைத்து கதையோடும் காட்சிகளோடும் நம்மை ஒன்றச் செய்கிறார். நாயகனான ஷாருக் தவிர்த்து இங்கிலாந்து செல்ல முயலும் அந்த நால்வருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அதில் சுகியாக வரும் விக்கி கெளஷல் கதை ரணங்கள் நிறைந்தது. நம்மை கண்ணீரில் நிறைப்பது. மனுவின் கதையோ இழப்புகளும் வலியும், அதனோடு சேர்ந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கின்ற வெறியும் நிறைந்தது. அவளின் நண்பர்களாக வரும் இருவரின் கதைகள் வசீகரத் தன்மை இல்லாததாக இருப்பினும், அந்தக் கதைகளின் வாயிலாக இயக்குநர் இறுதிக்காட்சியில் சொல்ல வரும் கருத்தியல், அந்தக் கதைகளின் தேவையையும் நியாயப்படுத்துகிறது. ஆக நாயகனுக்குப் பின்கதை இல்லையா என்று கேட்டால், மனுவின் குடும்பத்திற்கு நாயகன் எப்படி நன்றிக்கடன் பட்டவன் ஆகிறான் என்பதற்குப் பின்னாலும் ஒரு வலி நிறைந்த எமோஷ்னலான கதை இருக்கிறது. இப்படித் தொடக்கத்திலேயே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்கதை வைத்து நம்மைக் கவர்ந்திழுக்கும் ஹிரானி, அதற்குப் பின்னரும் பல்வேறுவிதமான கதைகளையும், கருத்தியல்களையும் காட்சிகளாகப் படைத்து நம்மைத் தொடர்ச்சியாக மனரீதியாகவும் அறிவுரீதியாகவும் வசீகரித்த வண்ணம் திரைக்கதையின் வழியாக முடிவை நோக்கி காந்தம் பின்னாலே செல்லும் இரும்பு போல நம் மனதை இலகுவாக இழுத்துச் செல்கிறார். அந்த முடிவுக் காட்சியும், அதன் பின்னர் வரும் புகைப்படங்களும் பத்திரிக்கை துணுக்குச் செய்திகளும் நம்மை உலுக்குவதோடு, அது தொடர்பான பல்வேறு கேள்விகளை நம் மனதிற்குள் ஆழமாக விதைத்து, அது தொடர்பான விவாதங்களை வீரியத்துடன் வெளிவரச் செய்வதாக அமைந்திருக்கிறது.
நடிகர்கள் அத்தனை பேரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார்கள். சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலமாகக் கூட வாழ்க்கையின் வலியைக் காட்டி, அதைக் காட்சிகளின் வழியே நம் மனதிற்குள் எப்படி இலகுவாகக் கடத்தி நம்மை அதை உணரச் செய்கிறார் என்கின்ற பிரமிப்பு இன்னும் அகலவில்லை.
படத்தின் டிரைலர் எனக்கு நம்பிக்கை அளிக்காமல் ஏமாற்றம் அளித்தது என்னவோ உண்மை தான். ஆனாலும் “ராஜ்குமார் ஹிரானி” என்கின்ற அந்த அடையாளத்தின் மேல், அவரின் படங்கள் அப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிவிடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வென்றுள்ளது. டிரைலராகப் பார்க்கும் போது இது ஏதோ மொழி சார்ந்த தேவையையும், அதன் பின்னணி அரசியல் மற்றும் பிரச்சனைகளையும் பேசும் படம் என்று தவறாகக் கணித்திருந்தேன்.
ஆனால் டன்கி திரைப்படம் அதை மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி விஸ்தாரமான பல எல்லைகளை உள்ளடக்கிய பல்வேறு பிரச்சனைகளைப் பேசுகிறது. அதிலும் குறிப்பாகக் கடல் கடந்து, மலை கடந்து உயிர் பிழைக்கவும் வாழ்க்கையை வாழவும் செல்லும் எளிய மக்களின் வலியைப் பேசுகிறது.
படிப்பும் பணமும் இருக்கும் நபர்கள் மேற்கொண்டு படிக்கவோ அல்லது பணம் சம்பாதிக்கவோ சட்டரீதியாக வரும் போது அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் நாடுகள், படிப்போ பணமோ இன்றி, படிப்பதற்காகவோ அல்லது அதிகமாக சம்பாதிப்பதற்காகவோ வராமல், தங்கள் உயிரை காத்துக் கொள்ள சட்டரீதியாகவோ சட்டத்திற்குப் புறம்பாகவோ வரும் எளிய மக்களைக் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஏன் வஞ்சிக்கிறது வதைக்கிறது என்று வினவுகிறது டன்கி.
140 ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த விசா மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஏன் எளிய மக்களின் கைகளுக்கு என்றுமே கிடைக்காமல், உயர்தட்டு மக்களின் கைகளுக்கு எட்டும்படியே ஏன் உலவிக் கொண்டு இருக்கிறது என்று கேட்கிறது டன்கி.
அமன் பந்த்-தின் இசையும், ராஜ்குமார் ஹிரானியின் படத்தொகுப்பும் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கின்றது. வலதுசாரி அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களுக்கு இப்படம் கண்டிப்பாகப் பிடிக்காது. அதை அவர்களால் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. அதனால் ஏதேதோ காரணங்கள் காட்டி சப்பைக் கட்டு கட்டுவார்கள்.
ஆனால் இடதுசாரி அரசியல் சிந்தனை கொண்டவர்களுக்கு இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். ஏனென்றால் “டன்கி” பேசுவது எல்லைகள் ஏன் வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை, புலம் பெயர்ந்த மக்களின் வலியை, நாடு விட்டு நாடு சம்பாதிப்பதற்காகவே செல்லும் பேராசைக்காரகளின் புத்தியீனத்தை.
ஆக டங்கி எளிய மக்களின் வலியை எளிய மக்களுக்காகப் பேசுகிறது. அதை நாம் ஆதரிக்கவில்லை என்றால், அது எளிய புலம் பெயர் மக்களுக்காக ஒலிக்கும் குரலை, குரல்வளையை நெறிப்பதற்குச் சமானம். அந்த அறமற்ற செயலை நாம் செய்யாமல் இருப்போம்.
‘டன்கி’ – நிச்சயம் கொண்டாடப்படவேண்டும். கொண்டாடுவோம்.
– இன்பராஜா ராஜலிங்கம்