Shadow

காளி விமர்சனம்

Kaali movie review

ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.

படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம்.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்த நாயகன், அதற்குரிய எந்தக் குணாம்சமும் இல்லாமல், டூரிங் டாக்கிஸில் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே பார்த்து வளர்ந்தவன் போல் அப்படி ஃபீல் செய்கிறார். இந்தியாவிற்கு வந்ததும் ஒரு வீட்டைப் பார்த்ததுமே, கிடைக்கும் ஒன்றிரண்டு தெளிவில்லாத க்ளூக்களைக் கொண்டு, “அடிவயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே” என உருகத் தொடங்குகிறார். பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்படத்தில் வரும் தாய் சென்ட்டிமென்ட் காரணமென விஜய் ஆண்டனி நம்புவது காரணமாக இருக்கலாம். அதற்காக? திரைக்கதையின் ஓட்டத்தோடு இல்லாமல் திணிக்கப்படும் எதுவும் சோபிக்காமல் தான் போகும்.

இரத்த மாதிரி (sample) எடுத்து டி.என்.ஏ. மேட்ச் செய்து பார்த்து, தன் மூதாதையரைக் கண்டுபிடிக்கிறார் மருத்துவர் விஜய் ஆண்டனி. ஆனால் அதற்கு முன், ‘நான் வெள்ளையா இருக்கேன். என் அப்பாவும் வெள்ளையா தான் இருக்கணும்’ என்று தன் தேடலைத் தொடங்குகிறார். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.! அமெரிக்க டாக்டரான விஜய் ஆண்டனிக்கும், உள்ளூரில் வெட்டியாகத் திரியும் யோகி பாபுவின் சிந்தனைத் திறனுக்கும் ஒரு சின்ன வேறுபாடாவது வேண்டாமா?

சித்த வைத்தியர் வள்ளியாக வரும் அஞ்சலி பாத்திரத்தை எப்படிச் சுவாரசியப்படுத்தலாம் என மெனக்கெட்டாததாகத் தெரியவில்லை. விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்கும் கதைகளே நாயகிக்கு முக்கியத்துவமின்றி அப்படித்தான் இருக்கும். அதையும் மீறி, பூமயில், பார்வதி என சில அட்டகாசமான பெண் பாத்திரங்கள் படத்தில் உண்டு. “அரும்பே! அரும்பே! என்னைக் கடத்திப் போ கரும்பே!!” என பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் வரும் பாடல் மிகவும் அற்புதம். அந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ள விதம், அதன் பேசுபொருள் என அனைத்துமே அட்டகாசம். பார்வதியாக ஷில்பா மஞ்சுநாத் வரும் இந்த அத்தியாயத்தை மட்டுமே ஒரு படமாக எடுத்திருக்கலாம் கிருத்திகா.

கல்லூரி மாணவி தேன்மொழியாக வரும் அம்ரிதாவின் அத்தியாயம், 80களின் தமிழ் சினிமாவின் அப்பட்டமான பிரதி போன்றே உள்ளது. மற்ற இரண்டு அத்தியாங்களோடு ஒரு சின்ன இழையாகவாவது தொடர்புபடுத்தி இருக்கலாம். பூமயிலாக வரும் சுனைனா அத்தியாயத்திலும், ஷில்பா மஞ்சுநாத் அத்தியாயத்திலும் வழக்கமான முறுக்குடன் வேல ராமமூர்த்தி சிலம்பிக் கொண்டிருக்கிறார். ஃப்ரீ க்ளைமேக்ஸில், 28 வருடங்களுக்குப் பின் கத்தியோடு என்ட்ட்ரி ஆகும் R.K.சுரேஷ் கதாபாத்திரம் நல்ல காமெடி. தன் ரத்தத்தைக் கொடுத்து மீட்பரைக் காப்பாற்றும் மீட்பரின் மீட்பராக விஜய் ஆண்டனியை ஜொலிக்க வைக்க, இப்படிலாம் ட்விஸ்ட் யோசிக்காமல் திரைக்கதையில் கொஞ்சம் யதார்த்தத்தையும் யோசித்திருக்கலாம்.

‘தானொரு தியாகி’ என்ற பாவனை விஜய் ஆண்டனியிடம் படம் முழுவதும் இருக்கிறது. அதற்கு மகுடம் சூட்டுவது போல் உள்ளது க்ளைமேக்ஸ். ஒரு மனிதர் தன் வாழ்நாளெல்லாம் ஓர் ஊரின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிறார். அவரிடம் மிக முக்கியமான ஓர் உண்மையை மறைப்பதன் மூலம், அந்த ஊரிற்கு நல்லது செய்வதோடு மட்டுமில்லாமல், தன் தாயின் ஆசையையும் நிறைவேற்றுவதாக எண்ணிப் புளகாங்கிதம் அடைகிறார் விஜய் ஆண்டனி. அதாவது விஜய் ஆண்டனி உண்மையைச் சொல்லிவிட்டால், 28 வருடங்களாக சமூக நீதிக்காகப் போராடி அதை அந்த ஊரில் நிலைநாட்டி விட்ட அந்த மனிதர், உடனே கிளம்பி விஜய் ஆண்டனியோடு அமெரிக்காவிற்கு வந்து விடப் போவதில்லை அல்லது அவர் 28 வருடங்கள் கொண்டு வந்த மாற்றம் இல்லாமல் போய் விடப் போவதில்லை. ஆனாலும் நாயகனுக்குத் தானொரு தியாகியாக இருப்பதில் ஒரு பெரும் பிரேமை. அண்ணாதுரைக்கும் இதே ‘தியாக’ சிண்ட்ரோம் பிரச்சனை இருந்தது.

கதைக்குள் கதை என நீள்கிறது திரைக்கதை. உபகதைகளின் பிரதான பாத்திரமாகவும் விஜய் ஆண்டனியே திரையில் தோன்றுகிறார். சிக்கல் என்னவென்றால், மதுசூதன் ராவாக, நாசராக, ஜெயப்ரகாஷாக என மூன்று வெவ்வேறு பாத்திரங்களிற்கும், ஒரே உடற்மொழி, ஒரே குரல், ஒரே முக பாவனை என எந்த மாறுபாடும் காட்டாமல் ஃப்ளாஷ்-பேக்கில் விஜய் ஆண்டனியே நடிப்பது எடுபடாமல் போகிறது. விஜய் ஆண்டனியைக் கொண்டு, இந்த விஷப் பரீட்சையை இயக்குநர் கிருத்திகா உதயநிதி தவிர்த்திருக்கலாம்.