மிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி வாங்குவதற்காக ஜெயராமின் மகள் மீது புகுந்து கொள்கிறது. அவ்வேதனையில் இருந்து அக்குடும்பம் எவ்வாறு மீள்கிறது என்பதுதான் படத்தின் கதை. ‘ஆடுபுலியாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் இது.
கதை தொடங்குவதற்கு முன்பே கவரும் விஷயமாக கேமிரா கோணங்கள் உள்ளது. வனத்தின் வசிகரீக்கும் கலர் டோனும் தொடக்க காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். பேயாகிக் கணவனைக் காக்கும் வனராணியும், அந்த செண்பகக்கோட்டையின் ஃப்ளாஷ்-பேக் எபிசோட்டும் நல்லதொரு தொடக்கம்.
தினேஷ் பல்லத்தின் கதையில், வலிமையான கதாபாத்திரங்கள் இருந்தும் திரைக்கதை அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் படிந்து விட்டதொரு குற்றவுணர்ச்சி கோடீஸ்வரரான ஜெயராமைத் தூங்க விடாமல் அலைக்கழிக்கிறது; பசியால் துடித்து இறந்து போன தன் மகளின் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டுமென்ற வெஞ்சினத்துடன் வாழும் ரம்யா கிருஷ்ணன்; பணத்துக்காகப் பாசாங்காய்ப் பேசி நம்ப வைத்து துரோகம் செய்தவரை சித்திரவதை செய்யப் பிரியப்படும் சிறுமி; பைத்தியமே ஆனாலும் தான் காதலித்த பெண்ணென விட்டுப் பிரிய மனமில்லாமல் இருக்கும் சம்பத் என கதாபாத்திர வடிவமைப்பு நன்றாக உள்ளன. எனினும் உதட்டசைவுகளுக்குப் பொருந்தாத வசன உச்சரிப்புகள் படத்தின் அந்நியத்தன்மையைப் பறைசாற்றிய வண்ணமுள்ளன.
வழக்கமான கதாபாத்திரமாக வரும் ரம்யா கிருஷ்ணன், முதல் பாதியை விடச் சுமாரான மேக்கப்பில் வரும் இரண்டாம் பாதியில் கதாபாத்திரமாக ஈர்க்கிறார். அவர் காட்டும் ரெளத்திரமும், பின் அவரெடுக்கும் முடிவும் அற்புதம். இரண்டாம் பாதியைத் தனியாகப் பார்த்தால் மட்டுமே கூட படத்தின் கதை புரியும். சாமியாராக வரும் ஓம் புரியின் இறுக்கமான முகமும், தீர்க்கமான பார்வையுமே அச்சுறுத்துகிறது. பெரிய பணக்காரன் என்றாலும், தண்ணீர் டம்ளருக்குள் புழு நெளிவது போன்ற மனப்பிரமையும், தூங்க முயன்றால் வரும் கொடுமையான கனவுகளும், ஜெயராமை எப்படித் தொந்தரவு செய்கின்றன என்பதை படத்தின் முதல் பாதியில் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கலாம் இயக்குநர் தாமரக்கண்ணன்.
ஜெயராமின் மகளாக நடித்திருக்கும் பேபி அக்ஷரா கிஷோரும், ரம்யா கிருஷ்ணனின் மகள் பேபி அஞ்சலீனாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். காமெடியனான சஜு நவோத்யா படத்தின் கலகலப்பிற்கு உதவவில்லை. செம்பகக்கோட்டை, ஃப்ளாஷ்-பேக்கில் வரும் மன்னர் கால போர்க் கருவிகள் என கலை இயக்குநர் சஹஸ் பாலாவின் கலை இயக்கம் படத்திற்குப் பெரும்பலம். முக்கியமாக அந்தக் காளியம்மன் சிலை வடிவமைப்பு அட்டகாசம்.
ஒரு மனிதன் செய்யும் குற்றம், அவனை அகமாகவும் புறமாகவும் எப்படித் தாக்குகின்றன எனச் சித்தரிக்கிறது படம்.