இந்தியர்களுக்கு நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீது ஈடுபாடு குறையவில்லை. பெரும்பாலான அலோபதி டாக்டர்கள் மாற்று மருத்துவத்தை நிராகரிப்பதோடு, அதற்கு எதிரான அபிப்ராயத்தையே வைத்துள்ளார்கள். நியூரோ-சைக்காட்ரிஸ்ட்டான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்திக்கும் மாற்று மருத்துவத்தின் மீது அத்தகைய மனப்பான்மையே இருந்து வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பின்னுள்ள அறிவியலை அறிய விரும்பி ஆய்வினை மேற்கொள்கிறார்.
முடிவாக, ட்ரைமெட் (TriMed) எனும் சிறிய க்ளினிக் ஒன்றைத் தொடங்குகிறார். அலோபதியுடன் ஆயுர்வேதம், யோகா, அக்குபிரஷர், இயற்கை மருத்துவம் (Naturopathy), பிலாட்டிஸ் (Pilates) ஆகியவற்றை இனைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாற்று மருத்துவத்தை உருவாக்குகிறார்.
பல்வேறு மாற்று மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்ததுதான் அவர் எடுத்து வைத்த முதல் படி. “இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட மையங்களில், நோயாளிகளே தங்களுக்கு விருப்பமான மாற்று மருத்துவத்தைத் தேர்வு செய்வார்கள். ஆனால், எங்கள் க்ளினிக்கில் நோயாளிகளுக்கு எத்தகைய சிகிச்சை அளிப்பது என்பதை நாங்களே முடிவு செய்வோம்” என்கிறார் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி. உடல்வலி, மனநலம் என சுமார் 40க்கும் மேற்பட்ட உபாதைகளுக்கு இன்ன சிகிச்சை முறை எனத் தரப்படுத்தி வைத்துள்ளனர்.
நோய்த் தொற்றியல் நிபுணரான (Epidemiologist) ரமா ரகு, “ட்ரைமெடின் நோக்கம் அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதே!” என்கிறார். ட்ரைமெட்டில், முதலில் ஒரு நோயாளி அலோபதி மருத்துவரிடமே அனுப்பி வைக்கப்படுவார். பின் பிசியோதெரபிஸ்ட், இயற்கை மருத்துவர், ஆயுர்வேத நிபுணர், சைக்காலஜிஸ்ட் போன்றவர்களிடமும் அனுப்பி வைக்கப்படுவார். தரப்படும் மருந்துகள் அலோபதி மட்டுமே என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர். கூடுதல் மருந்தில்லாத சிகிச்சையாக பாரம்பரிய மருத்துவங்களை உபயோகிக்கின்றனர். நோயாளியின் உடல்நிலையும் மனநிலையும் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான சிகிச்சை முறைகளை அலோபதி மருத்துவருடன், மாற்று மருத்துவ நிபுணர்கள் கலந்தோசிப்பார்கள். “சிலருக்கு சிகிச்சை முறைகளைத் தீர்மாணிக்க 2 மணி நேரங்கள் கூடக் கலந்தாலோசிக்க வேண்டி வரும். இதில் முக்கியமானது நோயாளிக்கு பூரணப் பராமரிப்பை அளிப்பதே!” என்கிறார் ரமா.
வீல் சேரில் வந்த 92 வயது முதியவர், 15 நாள் சிகிச்சைக்குப் பின், அவர் மருத்துவமனையை விட்டு நடந்து வெளியேறினாரென நிறைய மகிழ்ச்சியும் வெற்றியுமான தருணங்களைக் கொண்டுள்ளது ட்ரைமெட்.
சமீபத்தில், ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் ஏற்பாடு செய்திருந்த “மருந்துகளுக்கு அப்பால்” என்ற ஒருங்கூடலிலும் விளக்கக்கூட்டத்திலும், நிமான்ஸ் (NIMHANS) இயக்குநர் பேராசிரியர் B.N.கங்காதரும், ஹாங்-ஹாங்கிலுள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிண்டா லேமும் உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.