32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வெள்ளிவிழா நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் உழைப்பு | Kadhal Reset Repeat

Dinesh R சேலம் Published: 01/03/2026 3 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 சினிமா
எழுத்து அளவு:

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அர்ஜுன் அசோகன், ”நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரைக் கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களைக் கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தக் கேரக்டர் ரொமான்டிக்காகவும் இருக்கும், காமெடியும் இருக்கும், சில நேரங்களில் வில்லனாகவும் இருக்கலாம். ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா? மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்? மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்? பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம், மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை, இது போன்ற படங்கள், இதுபோன்ற பாடல்கள், தமிழ் மொழி கவிதைகள் இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்தத் துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேசத் தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில், நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்தத் தொடங்கலாம், அதனை விற்பனையும் செய்யலாம், இதுபோன்ற காலகட்டத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே! அவருடைய உழைப்பு வியக்க வைக்கும்.

‘உன் பார்வை..’ பாடலைப் பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரைத் தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் ட்யூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காகக் காத்திருந்து அதைச் சிறிது சிறிதாகச் சேகரிக்கிறார். ‘காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க, நானும் நீயும் அங்கே இறக்கைக் கொண்டு பறக்க, வானம் பூமி எங்கே..’ என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார்.‌ பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது.‌ இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண் குரலுக்குக் கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலைச் செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது. வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போல், இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை, காலத்தைக் கடந்து நிற்கும்.

சத்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல், மென்மையான இசை என ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்தப் படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.