Shadow

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது.

சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச் (destroy mode) சென்று ஷங்கரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. செயற்கை நுண்ணறிவின் கோபத்தில் இருந்து ஷங்கரால் தப்பிக்க முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.

காதலி அனுப்பும் செய்தியை மாற்றி அனுப்பவதோடு, நண்பனின் மனைவிக்கு ஏடாகூடமாகவும் செய்தி அனுப்பி பிரச்சனையை மூட்டிவிடுகிறது சிம்ரன். காதலியின் எண்ணை அவ்வப்போது ப்ளாக் செய்து பேசவிடாமலும் தடுக்கிறது. நாயகன், ஃபோன் உபயோகிக்காவிட்டாலும், 24 மணி நேரமும் அவனைக் கண்காணிக்கிறது சிம்ரன். சகலத்தையும் ஹேக் செய்யவல்ல சிம்ரன் வசம் ஷங்கரின் வங்கிக் கணக்கு முதல் அனைத்து தகவல்களும் உள்ளன. அதனால் அவனை ஓட்டாண்டி ஆக்குகிறது சிம்ரன். சிம்ரனாக மேகா ஆகாஷ் நன்றாக நடித்துள்ளார்.

சிம்ரனை உருவாக்கிய மென்பொருள் நிபுணராக ஷா ராவும், அதற்கு இன்வெஸ்ட் செய்பவராக பக்ஸ் என்கிற பகவதி பெருமாளும் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு உதவ ரொம்பவே மெனக்கெடுகின்றனர். நாயகனின் தந்தையாக பாடகர் மனோ நடித்துள்ளார். குணசித்திர வேடமாக அல்லாமல் அவரையும் நகைச்சுவைக்கு உபயோகப்படுத்த முயற்சி செய்துள்ளனர். 

துளசியாக அஞ்சு குரியன், சிம்ரனாக மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். ஷங்கரின் நண்பன் விக்கியாக மாகாபா ஆனந்தும், அவரது மனைவி அனிதாவாக திவ்யா கனேஷும் நடித்துள்ளனர். ஷங்கரின் எண்ணில் இருந்து, அனிதாவிற்குச் செய்தி அனுப்பி சிம்ரன் செய்யும் அட்டகாசம் எல்லாம் பயங்கரமானதாய் உள்ளன. ஃபோன் உபயோகித்துத்தான் ஆகவேண்டுமா என யோசனை செய்ய வைக்கிறது.

சிரித்த முகத்துடன் மிர்ச்சி சிவாவின் சொல்லும் இன்னொசென்ட்டான ஒன்லைனர்ஸ் எப்பொழுதும் போல் கலகலப்பிற்கு உதவியுள்ளன. அழுத்தமான நகைச்சுவையாக இல்லாமல் மெலிதான நகைச்சுவை இழையோடு படம் பயணிக்கிறது. யார் யாரைக் காதலிப்பதாக நினைத்து, யார் யாரைத் தேடுகிறார்கள் என்ற சுந்தர். சி பாணியான க்ளைமேக்ஸ் குழப்பம் நன்றாக உள்ளது.