Shadow

தக்ஸ் விமர்சனம்

‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான்.

சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முரட்டுத்தனமான காவல்துறை அதிகாரி பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். இரட்டையர்களான அருணும் அரவிந்தும், தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்ள வேட்டியைச் சட்டென மாற்றிக் கொள்ளும் இட்த்தில் ரசிக்க வைக்கின்றனர்.

சிறையில் சேதுவின் அறைவாசியாக வருகிறார் பாபி சிம்ஹா. அவரது முரட்டுத்தனமான உருவமும், குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தையும் போகிற போக்கில் பதிந்து விடுகிறார் இயக்குநர். நாயகன், நாயகியையும் விட முழுமை பெற்றதொரு பாத்திரம் பாபி சிம்ஹாவிற்குக் கிடைத்துள்ளாது. நாயகன் ஹிரிது ஹரூனை விட குறைவான காட்சிகளில் வந்தாலும் படத்தின் நாயகன்களில் ஒருவர் எனும் அடையாளத்தை இலகுவாகப் பெறுகிறார்.

ஆட்டோ ஷங்கராக நடித்த ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் அப்பாணி சரத், இப்படத்தில் சுப்புராயன் எனும் சிறைவாசியாக நடித்துள்ளார். சரத்தைச் சிறையிலிருந்து தப்பிக்க விடக்கூடாதென முறைத்தவண்ணம் பட்த்தில் வலம் வருகிறார். சிறையிலிருந்து தப்பிக்க சாத்தியமில்லை என நம்பும் பாத்திரத்தில் முனீஷ்காந்த் நடித்துள்ளார்.

இருநூற்று சொச்சம் கைதிகளைக் கொண்ட சிறை என்பதற்கேற்ப இல்லாமல் சற்றே சிறிய சிறையாக உள்ளது. அதற்குள் சுவாரசியத்தைத் தக்க வைக்கும் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. அவ்றொடு இணைந்து பரபரப்பான ப்ரிஸன் ப்ரேக் படத்தைத் தர சாம் சி.எஸ்.-உம் முயற்சி செய்துள்ளார்.

சேதுவாகப் புதுமுகம் ஹிரிது ஹரூன் நடித்துள்ளார். அறிமுக நடிகர் போலில்லாமல் மிக அனுபவம் வாய்ந்த நடிகர் போல் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். நாயாகனால் காப்பாற்றப்படவும் காதலிக்கப்படவும் ஹிரிது ஹரூங்க்கு ஜோடியாக கயல் எனும் பாத்திரத்தில் அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ராங்கி படத்தில் த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்தவர். சிறையில் இருந்தும் தப்பிக்கும் கைதிகளின் பராக்கிரமம்தான் பட்த்தின் மையம் என்பதால், ஃப்ளாஷ்-பேக்கில் வரும் அனஸ்வரா ராஜனிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக அமைந்துள்ளது.

தப்பிக்கும் படலத்தில் கைதிகள் எதிர்கொள்ளும் தடங்கல்கள் வலுவானதாக இல்லாதது குறை. நீரை இரு கைகளால் அள்ளும்பொழுது இடையில் வழிந்தோடுவது போல், பெரிய சிரமங்களை தக்ஸ்கள் எதிர்கொள்ளவில்லை. படம் விஷுவலாக ஈர்க்குமளவு அமைக்கப்பட்டிருந்தாலும் கதையோடு ஒன்றி ரசிக்க இயலாமல் போகிறது.