Shadow

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்களப் பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே…’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனைச் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார்.

காதல் உணர்வு ததும்பும் இந்தப் பாடலில் நடிகர் துல்கர் சல்மானும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காஷ்மீரின் பனி படர்ந்த பிரதேசத்தின் பின்னணியில் பயணித்துக் கொண்டே தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வது இளம் பார்வையாளர்களை வசீகரித்திருக்கிறது.

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தானா ஆகியோர் நடித்திருப்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சீதா ராமம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.