
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்துவிட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்துவிட்டது. செத்துக் கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.
ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து டைரக்டராக மாறி, ஜெயித்து, தோற்று, காணாமல் போய், மீண்டும் திரும்பி வந்து, தற்போது வெற்றி முன்பின் வந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், மாநாடு மூலம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி எனக்குக் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் இந்தப் படத்தைப் பார்த்த பெண்மணி என் நடிப்பு பிடித்திருக்கிறது எனப் பாராட்டுவதைப் பார்க்க முடிகிறது. குழந்தைகள் இந்தப் படத்தில் நான் பேசிய வசனங்களை என்னைப் போல பேசுகின்ற வீடியோக்களையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்நிகழ்வில், எஸ்.ஜே.சூர்யா பற்றிப் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ்.ஜே.சூர்யா, ‘இந்தப் படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும். அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள்’ என தமாஷாகக் கூறினார். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்” எனக் கூறினார்.