Shadow

Surya Sethupathi: தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃப் | பீனிக்ஸ் – வீழான்

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேகா, “மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி.எஸ் அவர்கள் பிரமாதமாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா அவர்களின் முதல் படமே சிறப்பாக வந்துள்ளது. அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வருவதற்கு இந்தப் படமே ஒரு எடுத்துக்காட்டு. பீனிக்ஸ் என்பது ஒரு நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கைதான் ஒரு வாழ்க்கையின் முக்கியமானது. நம்பிக்கைதான் நம்மை நகர்த்துகின்ற மிகப் பெரிய பலம். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கலைஞர் என்றால் அது அனல் அரசு அவர்கள் தான். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படம் பீனிக்ஸ். ஒரு தமிழராக இருந்து ஹிந்தியில் 18 படங்களில் வேலை செய்துள்ளார். அதில் சல்மான் கான் உடன் மட்டும் 7 படம். தளபதி விஜய் அவர்களுடன் 9 படம் பணிபுரிந்துள்ளார். ஒரு முழு ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களின் வெற்றி பலருக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. விஜய் சேதுபதி அவர்களின் வெற்றியைப் பார்த்து 100 பேர் வந்தால், அவரின் மகனின் வெற்றியைப் பார்த்து 200 பேர் வருவார்கள். விஜய் சேதுபதி அடையாளம் என்றால், சூர்யா ஒரு குறியீடு” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா, “முழுப் படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் பீனிக்ஸ் நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்தப் படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எஜ் த்ரில்லராகப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் பற்றி நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்குப் பிறகு எனக்கு ஃபோன் போட்டு திட்டுங்கள். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதை அனல் அரசு அவர்கள் நிச்சயம் பெறுவார். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராஃபாக நிச்சயம் சூர்யா வருவார். தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் மகாராஜா. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக பீனிக்ஸ் இருக்கும். விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களைக் கொடுத்துள்ளார், தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி அவர்கள். அவரைத் தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார்” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ், “சூர்யா அவர்களிடம் நல்ல ஒரு தெளிவு உள்ளது. பல நாட்களாக சினிமாவைக் கரைத்து குடித்தது போல் தெளிவாகப் பேசினார். விஜய் சேதுபதி அவர்களைவிட, அவரது மகன் சூர்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் விஷால் அவர்களைப் பார்க்கும்போது என்ன தோன்றியதோ அதேபோல் தான் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது தோன்றுகிறது. விஜய் சேதுபதி அவர்களின் 10 படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தாலே சூர்யா நல்ல நடிகராக வந்துவிடலாம். ஒரு அண்ணனாக நானும் உங்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் ஹெச்.வினோத், “சூர்யாவை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன். ஆனால் அனல் அரசு முந்திவிட்டார். ஒரு ஹீரோ ஒரு ஆக்‌ஷன் ஹீரோ ஆவதற்கு 10 படங்கள் தேவைப்படும், ஆனால் சூர்யாவிற்கு முதல் படத்திலேயே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ” ‘என்னுடைய தலையீடு இல்லாமல் என் மகன் சூர்யா திரைக்கு வரட்டும்’ என்று விஜய் சேதுபதி அவர்கள் சொல்லி இருந்தார். பீனிக்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் மகன் சிறப்பாக நடித்துள்ளார்’ என்று சொன்னேன். இந்தப் படத்தின் வேலைகளை முடிக்கும் போது ஒரு திருப்தி இருந்தது. என்னுடைய சினிமா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அனல் அரசு அவர்கள் ஒரு லட்சியமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பீனிக்ஸ் படம் எனக்கும் சூர்யா அவர்களுக்கும் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இந்தப் படத்தில் வேலை பார்த்தது மிகவும் பெருமையாக உள்ளது” என்றார்.

விஜய் சேதுபதி, “என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. 2019இல் எனக்கு அனல் அரசு அவர்கள் கதையைச் சொன்னார். ஆனால் அப்போது அதனைப் பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்தக் கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவைக் கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது, ‘மகிழ்ச்சியாக உள்ளதா?’ என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார். அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. அவர்களின் சார்பிலும் நான் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சூர்யா சேதுபதி, “கடந்த இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும் நண்பர்களும் பத்திரிகையாளர்களும் தான் காரணம். அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது. நான் சோர்வாக இருக்கும் போது எனக்கு உத்வேகம் அளித்து இந்தப் படத்தில் நடித்த அனைவரும் உதவினார்கள். தேவதர்ஷினி அவர்கள் படத்தில் மட்டும் அம்மா இல்லை, நிஜ வாழ்க்கையிலும் எனது அம்மா தான். என் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. இயக்குநர் அனல் அரசு அவர்கள் நிறைய சொல்லிக் கொடுத்தார்” என்றார்.

இயக்குநர் அனல் அரசு, “இந்த இடத்திற்கு வருவதற்கு எனது அப்பா மிக முக்கியக் காரணம். சண்டைப் பயிற்சி இயக்குநராக 200 படங்கள் பண்ணி இருந்தாலும், ஒரு இயக்குநராக என்னுடைய முதல் படம் இது. தயாரிப்பாளர் ராஜலட்சுமி இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. இந்தப் படத்தை மிகப்பெரிய படமாக மாறியதற்கு இவரும் முக்கிய காரணம். ஜவான் படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அதன் பிறகு தான் விஜய் சேதுபதி அவர்களிடம் சொன்னேன். ஒன்றரை வருடமாக சூர்யா அவர்கள் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தார். சூர்யா அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது” என்றார்.