
கெளதம் ராம் கார்த்திக், வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப். எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவராவார்.
இந்தப் பெயரிடப்படாத் திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் கெளதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், “நாங்கள் வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவத்தைத் தொடங்கிய முக்கிய நோக்கம், நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைத்திறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசைத் துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரியபிரதாப் இந்தக் கதையை விவரிக்கும்போது, அவர் உணர்வுகளை நேரடியாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனை உணர்ந்தேன்.
நகைச்சுவையிலிருந்து மிக ஆழமான கதாபாத்திரங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் தன்னை நிரூபித்தவர் கெளதம் கார்த்திக். இந்தப் படத்தில் அவர் ஒரு போலீசாக வரும் வகை, அவரது கேரியரில் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” எனச் சொல்லியுள்ளனர்.
இதற்கு முன் வேரூஸ் புரொடக்ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற பேச்சி எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இணை தயாரிப்பு செய்திருந்தது.
தொழில்நுட்பக் குழு:-
ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா
படத்தொகுப்பு – ஜான் அபிராம்
இசை – வித்துசனன்
தயாரிப்பு வடிவமைப்பு – பவனா கோவர்தன்
சண்டை – மிராகிள் மைக்கேல்
VFX – ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோக்களின் சந்தகுமார்
ஆடை வடிவமைப்பு – தீப்தி ஆர்.ஜே
தயாரிப்பு மேலாளர் – தனலிங்கம்
மக்கள் தொடர்பு – ரேகா
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற உள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது, அதனை சிறப்பாகச் செய்வதற்காக பான் இந்தியா புகழ்பெற்ற பல பிரபல கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

