
சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், “சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இது எங்கள் முதற்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40 நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி சார் அறிமுகம். 2கே ஜெனரேஷனை நெகட்டிவாகக் காட்டுகிறார்கள். ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார்” என்றார்.
இசையமைப்பாளர் இமான், “இந்தத் திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தைச் செலவிட்டு, இப்படத்தைப் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “திட்டமிடலில் சுசீந்திரன் சாரை மிஞ்ச முடியாது. இந்த விழாவையே சரியாக ஒரு மணிக்குத் திட்டமிட்டு இருந்தார், திடீரென போன் செய்து, 12:30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என்றார். எல்லோரையும் வரவைத்து ஸ்கிரீனில் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது, இங்கு மேடையை ஒருங்கிணைத்தார். அவரின் இந்தத் திட்டமிடல் தான், அவரிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்துக் காட்டுகிறார் சுசீந்திரன்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன், “வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப் படம் தந்துள்ளது. வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 ஆவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு – V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இம்மான்
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா
படத்தொகுப்பு – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பு – மீரா
போஸ்டர் வடிவமைப்பு – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி – T.முருகேசன்
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்