
தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள்.
ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி.
அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு மீனவக் கிராமப் பெண்ணாக நடித்து தண்டேல்க்கு உயிர் கொடுத்துள்ளார். தன் பேச்சைக் கேட்காமல், நாயகன் மீன் பிடிக்கச் சென்று விடுகிறான் என்ற சாய் பல்லவியின் ஏமாற்றத்தில் இருந்து படம் தொடங்குகிறது. பத்தின் முதற்பாதி, சாய் பல்லவியின் கோணத்தில் இருந்தே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், பாகிஸ்டான் சிறையில் நடக்கும் சம்பவங்களால் அமைந்துள்ளது.
பான்-இந்தியா படம் என்பதால், பாகிஸ்தான் சிறைக்குள் தேசப்பற்றுக் காட்சிகள் தூக்கலாக உள்ளது. ஒரு தீவிரவாதி கதாபாத்திரம், இந்தியர்களை உரண்டை இழுத்துக் கொண்டே உள்ளது. அதைப் பாகிஸ்தான் சிறை அதிகாரியாக நடித்துள்ள பிரகாஷ் பெலவாடி பாத்திரம் மூலம் பேலன்ஸ் செய்துள்ளனர். அவர் வழக்கம் போல் தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்படுவதால் ஏற்படும் கலவரத்தில் இருந்து இந்தியர்களைக் காக்க மெனக்கெடுகிறார். இந்தியர்களின் விடுதலையை அவர் அக்கறையாக வரவேற்பது அழகு.
சாய் பல்லவியைப் பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளையாகக் கருணாகரன் நடித்துள்ளார். சாய் பல்லவி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எல்லாம் ஆதரவாக நின்று ரசிக்க வைக்கிறார். சித்தா எனும் பாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். பெரும்பாலும் அவருக்கு நாக சைதன்யாவைப் புகழ்வதே வேலை.
சத்யா எனும் பாத்திரத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்தியுள்ளார் சாய் பல்லவி. கோபம் ஒருபுறம், எதார்த்தத்தைப் புரிந்து களத்தில் இறங்கும் தைரியம் மறுபுறம் என கதாபாத்திரத்தின் தன்மையை அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். ஒன்பது மாதம் கடலில் இருக்கும் காதலன், வருடத்திற்கு மூன்று மாதம்தான் மச்சதேசத்திற்கு வருவார். அவர்களது காதலுக்கு, அந்த ஊர் மக்களும், கடலும், சிவலிங்கமும், கலங்கரை விளக்கமும், ஸ்மார்ட் ஃபோனுமே சாட்சி. ஷ்யாம் தத்தின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம்.
கடலில் இருந்து கரை நோக்கி வரும்போது கொஞ்சம் சிக்னல் கிடைத்தாலும், ‘புஜ்ஜித்தங்கம்’ என ஃபோன் போட்டு காதலில் மூழ்குகிறார் ராஜு பாத்திரத்தில் நடித்திருக்கும் நாக சைதன்யா. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஓர் அதிகாரி கூட இவர்கள் காதலுக்குத் திடீரெனத் துணை புரிகிறார். நல்ல காதல் படமாகத் தொடங்கி, பாகிஸ்தான் சிறையில் சிக்கி, மீண்டும் காதல்படமாக முடிகிறது தண்டேல்.