Shadow

விடாமுயற்சி விமர்சனம்

ஒரு நோக்கத்தை, குறிக்கோளை அடையும் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயலை முயற்சி (try/ effort) எனலாம். அத்தகைய முயற்சியில் வெற்றி பெறாவிட்டால், துவண்டு அப்படியே அம்முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதை விடாமுயற்சி எனலாம். ஒரு போட்டியில் கோப்பையை வெல்ல மேற்கொள்ளும் செயல்களை முயற்சி என்றழைக்கலாம். அப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், மனம் துவளாமல் அடுத்த முறையிலோ, அடுத்தடுத்த முறையிலோ வென்று காட்டுவதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது.

ஒரு கார் பயணத்தில் மனைவி கயலைத் தொலைத்து விடுகிறார் அர்ஜுன். அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். கயலை எப்படிப் போராடி அர்ஜுன் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மனைவியோ, குடும்ப உறுப்பினரோ, தொலைந்துபோகும் பொழுது, வெறுமென முயற்சி செய்யாமல் போராடி மீட்பதுதான் நாயகனுக்கு அழகு. அஜித்தும் அதைத்தான் செய்கிறார். ஆனால், தனது ரசிகர்களுக்குப் பெரியண்ணன் ஸ்தானத்தில் இருந்து ஏதாவது அட்வைஸ் செய்துவிடவேண்டும் என்ற அஜித்தின் நல்லெண்ணம் தலைப்பாகியுள்ளது. சோர்வான, சோகமான முகத்துடன் அஜித், “ஆரோக்கியமா, மகிழ்ச்சியா வாழப் பழகுங்க” என ஆரவ்க்கு ஆலோசனை சொல்கிறார். கடுப்பாகும் ஆரவ், ‘பூமர்’ என அஜித்தை விளிக்கிறார்.

ஜோனாதன் மாஸ்டோவ் இயக்கத்தில், 1997 இல் வந்த ‘Break Down’ எனும் ஹாலிவுட் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது விடாமுயற்சி படம். தீபிகாவாக நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ராவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. அப்பாத்திரம் மூல ஹாலிவுட் படத்தில் இல்லை. மகிழ் திருமேனியின் எழுத்தில் உதித்த பாத்திரம் தீபிகா. மற்றவரின் மனதோடு ஊடாடி, அவரது மனநிலையைக் குழப்புவதில் வல்லவராக உள்ளார் தீபிகா. ரெஜினா கசாண்ட்ராவிற்கு ஜோடியாக அர்ஜுன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ரக்‌ஷித். ரக்‌ஷித் என்ற பெயரிற்கு காப்பவன் எனப் பொருள். தீபிகா என்ற பெயரிற்கு ஒளி எனப் பொருள். தீபிகாவைக் காப்பாற்றி தன் வாழ்விற்கு ஒளியேற்றிக் கொள்கிறார் ரக்‌ஷித். பேசிப் பேசி எழுகின்ற அர்ஜுன் – கயல் காதலை விட, ஒரு ஆக்‌ஷனில், ஒரு புன்னகையில் பற்றிக் கொள்ளும் ரக்‌ஷித் – தீபிகாவின் அன்னியோன்யமான காதல் ரசிக்க வைக்கிறது.

உறவுச்சிக்கலைக் கையாண்ட விதத்தில் சோடை போயுள்ளார் மகிழ் திருமேனி. பன்னிரெண்டு வருட திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேற நினைக்கும் கயல் பாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷா, தனக்கு பிரகாஷுடன் affair இருப்பதாகச் சொல்லி விவாகரத்தினைக் கோருகிறார். யாரந்த பிரகாஷ் என்பது பார்வையாளர்களுக்குத் தேவையற்ற விஷயம், அது கயலின் பர்ஸனல். ஆனால், க்ளைமேக்ஸில் நாயகனின் விடாமுயற்சியால் கவரப்பட்டு, அர்ஜுனோடு இணைந்துவிடுகிறார் கயல். நாயகனின் உண்மைக் காதலுக்கு ஏமாற்றம் அளித்துவிடக் கூடாதென சுபமாக்கி விட்டுள்ளனர். ஒரு பெண்ணின் மனமோ, அவரது முடிவோ ஒரு பொருட்டல்ல எனும் விபரீதமான கருத்தாக்கத்தைப் போகிற போக்கில் பதிகிறது படம்.

மகிழ் திருமேனி தனது பேட்டிகளில் சொன்னது போல், இப்படம் அஜித் படமாக எடுக்கப்படவில்லை. அதே சமயம், மகிழ் திருமேனியின் படமாகவும் இல்லை. அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், படம் முழுவதும் இயலாமையை, ஏமாற்றத்தை, பரிதவிப்பைச் சுமக்கிறது. அவரது முகத்தில் சோகம் அப்பிக் கொண்டுள்ளது. கேமரா கோணத்தால் கூட, ரசிகர்கள் காண விரும்பும் அஜித் ஃப்ரேமில் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளனரோ எனத் தோன்றுகிறது. இப்படத்தை விட, அதிக நரையுடன் வீரம் படத்தில் வருவார் அஜித். அப்படத்தில் அவரது முடியின் அசைவிற்கே திரையரங்கம் அதிர்ந்தது. இரண்டாம் பாதியில், சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு வயது முதிர்ந்த பெண்மணியைப் பலி கொடுத்ததும் படம் சூடு பிடிக்கிறது. பேரரசு இயக்கத்தில், 2006இல் வந்த தருமபுரி படத்தில், முரடன் ஒருவன் விஜயகாந்தைச் சுட, அந்தக் குண்டு விஜயகாந்த சட்டைக்குள் வைத்திருக்கும் தாம்பாளத் தட்டில் பட்டு சுட்டவனையே வீழ்த்தும். அப்படியொரு குருட்டு அதிர்ஷ்டத்தில் உயிர் தப்பும் அஜித், அதன் பின் அதகளம் புரிகிறார். எனினும், ஆரவ், அர்ஜுன், நிகில் நாயர் போன்ற எனர்ஜி ததும்பும் நடிகர்களுக்கு முன் ஈடுகொடுக்க ரொம்பவே திணறியுள்ளார் அஜித். மாஸ் ஹீரோக்களின் அல்டிமேட் முதலே charisma தான். அதை அடகு வைத்து ஒரு முயற்சி செய்து பார்த்துள்ளனர். அதை ஈடு செய்யும் நடிப்போ, அல்லது பார்வையாளர்களை entertain செய்யும் பாவனைகளோ இல்லாமல், வேண்டா வெறுப்பாக ஒரு நீண்ட சாலையில் Lexus காரை டெஸ்ட் ட்ரைவ் செய்தது போன்றுள்ளது படம். இளமையான அஜித் ஆங்காங்கே படத்தின் முதற்பாதியில் தோன்றினாலும், சட்சட்டென Fast cuts-இல் மறைந்து விடுகிறார். மாஸ் மொமன்ட்ஸை வலிய திணிக்காமல் நடித்திருக்கும் அஜித்தின் முன்னெடுப்புக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுக்கலாம். ஆனால் அதற்கான படமாக விடாமுயற்சி அமையாமல் போய்விட்டது.

சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தரும், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷும் இணைந்து காருக்குள் நடக்கும் சண்டைக் காட்சியை மிக அற்புதமாகப் படம்பிடித்துள்ளனர். க்ளைமேக்ஸ் சண்டைகளை விடவுமே அது ரசிக்கும்படி அமைந்திருந்தது. படத்தின் க்ளைமேக்ஸும், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை ஞாபகப்படுத்துகிறது. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் அஜர்பைஜானின் நீண்ட நெடிய சாலையைக் கொண்ட நிலப்பரப்பு ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில், படமும் பார்வையாளர்களும் அந்நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது.