
இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும்.
மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், ‘ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?’ எனக் கேட்கிறார்.
தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், “அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்” என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட்.
இந்தக் கதையில், ரிச்சர்ட், ஆஸ்திரேலியாவில் வாழும் அவரது மூத்த மகன் ஃப்ரெடி, இளைய மகன் பீட்டர், பீட்டரின் மனைவி சார்மைன் வால்டர்ஸ், பீட்டரின் மகனும் – ரிச்சர்டின் பேரன் மார்க், மார்க்கின் மனைவி சாந்தி என பிரதான பாத்திரங்கள் அறுவர்தான். அனைவருமே உருவகங்களாகப் (Metaphor) பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கே செட்டிலாகிவிடும் ஃப்ரெடி, இந்தியாவையோ, இந்தியர்களையோ பொருட்டாகக் கருதாத உயர்வு மனப்பான்மையில் இருப்பவர். இந்தியாவை விட்டு வெளியேறாத தனது தந்தை ரிச்சர்ட் மீது ஆதங்கத்துடன் இருப்பவர். தந்தையுடன் இறுதி நேரத்தைச் செலவிட வரும் ஃப்ரெடிக்கு, ‘அதென்ன புதுசா இந்தியத்தன்மை?’ என தந்தை மீது கோபமெழுகிறது. முப்பதுகளில் இருக்கும் மார்க், இத்தகைய அடையாளச் சிக்கல்களில் இருந்து விடுபட்டவராய் உள்ளவர். ரிச்சர்ட், ஆங்கிலோ-இந்தியர்களின் கூட்டு மனநிலையின் குறியீடாகவும், சாந்தி, இந்தியர்களின் பிரதிநிதியாகவும் உள்ளனர்.
ஃப்ரெடியாக நடித்துள்ள நைஜில் ஃபூட், இக்குறும்படத்தை இயக்கியுள்ளார். எண்பது வயது ரிச்சர்ட்டாக, Calcutta, I’m sorry படத்தின் இயக்குநரான ஹாரி மெக்லூர் நடித்துள்ளார். குற்றவுணர்ச்சி, கடைசி நேரக் குழப்பம், இறக்கும் தருவாயில் ராணி மேரியின் பெயரை உச்சரிப்பது என மிக நன்றாக நடித்துள்ளார். படுத்த படுக்கையாக இருக்கும் அவர், தன் உணர்ச்சிகளைக் குரல் மாடுலேஷனில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளர். ஹாரி இயக்கிய படத்தில் கல்கட்டாவாக நடித்திருந்த ஜில்லியன் வில்லியம்சன், இப்படத்தில் சாந்தியாக நடித்துள்ளார். மார்க் வால்டர்ஸாக, ஆப்ரி கிங்-லீ நடித்துள்ளர். மார்க்கின் அம்மா சார்மைனாக ஆர்த்தி தேசாயும், அப்பா பீட்டராக ஆலனும் தந்தையின் குற்றவுணர்ச்சி புரிந்தவர்களாகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் இறந்ததும், அவர் முகத்தில் இங்கிலாந்து கொடி போர்த்தப்படுகிறது. இருநூறு ஆண்டு பழமையான அக்கொடியை, இயக்குநர் நைஜில் ஃபூட் குடும்பத்தினருடையது. புனித ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த அவரது மூதாதையர்க்கு வழங்கப்பட்ட கொடியைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர் இயக்குநரின் குடும்பத்தவர். ரிச்சர்ட் உண்மையிலுமே இறந்துவிட்டாரா எனச் சோதிக்க, ஆங்கிலோ-இந்தியர்களிடம் நிலவி வந்த பழக்கத்தின்படி முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு சோதிக்கிறார் ஃப்ரெடி.
மூன்று நாளில், ஒரு வீட்டுக்குள் எடுக்கப்பட்ட குறும்படம், வேறொரு பரிணாமத்தை அடைவது க்ளைமேக்ஸில்தான். ரிச்சர்டின் முகத்திலுள்ள கொடி நீக்கப்படுகிறது. பால்ய பருவத்து சிறுவன் ரிச்சர்ட் எழுந்து அமர்கிறான். அவனை வளர்க்கும் ராணி மேரி அங்கே அமர்ந்துள்ளார். சிறு வயது ரிச்சர்ட்டாக செம அழகான குட்டிப் பையன் கேஷவ் நன்றாக நடித்துள்ளான்.
இந்தியச் சமூகத்திற்குள் வாழ்ந்தும், தாங்கள் விரும்பியிராத இந்தியத்தன்மையை அடையாளம் காணும் கதைக்கருவை ஆந்த்ரோ அல்ஃபோன்ஸோ கோடிட்டுக் காட்டியுள்ளார். அதைப் பற்றி ஒரு குழுவாக மேலும் ஆய்வு செய்து, இந்த சிம்பிளான இறுதி வடிவத்தை எட்டியுள்ளனர். குற்றவுணர்ச்சியால் எழும் பாரத்தை இறக்கி வைக்க கலையை விடச் சிறந்த மார்க்கம் வேறில்லை. இக்குறும்படம், இந்தியத்தன்மையைத் தங்களுக்குள் அடையாளம் காணும் ஆங்கிலோ-இந்தியர்கள் பற்றியது மட்டுமில்லை, மொழி, இனம், மதம், வர்க்கம், தேசம் என எத்தகைய அடையாளச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டவர்களுக்குமானது.