Shadow

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுகிறதுநமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 பாகை சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாகத் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்களை மேற்கத்திய அறிவியல் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து கிளம்பி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஒரு ஆண்டாகக் கணக்கிடுகிறோம்.

இதெல்லாம் நிரூபிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கும் அடிப்படை அறிவியல்.

 
tropicofcapricorn
இப்போது கொஞ்சம் தமிழர்களின் பக்கம் வருவோம். பழந்தமிழர்களின் வானியல் அறிவு மிகவும் பழமையானது, உயர்வானது, இன்றைய கால அளவுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. இன்னும் சொல்வதாயின் தற்போதைய கால அளவைகளை விடவும் மிகத் துல்லியமானது. ஒரு நாளை ஆறு பொழுதுகளாக, அறுபது நாழிகைகளாய் நம் முன்னோர்கள் பிரித்து கூறியிருக்கின்றனர். மேலும் ஒரு வருடத்தை ஆறு பருவ காலமாய் பிரித்திருக்கின்றனர்.

அவை  முறையே இளவேனிற் காலம் (தை, மாசி மாத காலம்), முதுவேனில் காலம் (பங்குனி,சித்திரை மாத காலம்),  கார் காலம் (வைகாசி,ஆனி மாத காலம்), கூதிர் காலம் (ஆடி, ஆவணி மாத காலம்), முன்பனிக் காலம் (புரட்டாசி, ஐப்பசி மாதக் காலம்), பின்பனிக் காலம் (கார்த்திகை, மார்கழி மாத காலம்)  ஆகும். இவை ஒவ்வொன்றும் இரண்டு மாதங்களை உள்ளடக்கியது. இது மற்ற சமூக இனங்களில் காண முடியாதது. இவை எல்லாம் இன்றைக்கும் பொருந்தி வருவதில்தான் தமிழனின் மேதைமை தனித்து மிளிர்கிறது.

இந்த மாதங்களைத் தமிழர்கள் எப்படி வகுத்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இப்போதைய புவியியல் அறிஞர்கள் கற்பனையான ரேகைகளைக் கணக்கில் கொள்வதைப் போலவே, நம் முன்னோர்கள் பூமியை முப்பது பாகையாக (டிகிரி) பன்னிரெண்டு பாகங்களாய்ப் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் இராசியின் பெயரைச் சூட்டினர். இந்தப் பன்னிரெண்டு ராசிக்கு என இருபத்தி ஏழு நட்சத்திரங்களும், ஒன்பது கோள்களும் வரையறுக்கப் பட்டிருந்தன. இதையொட்டியே நமது சோதிட அறிவியல் அமைந்திருக்கிறது.

சூரியன் இந்த ராசிகளில் நுழையும் காலத்தை அந்த மாதங்களின் ஆரம்ப தினமாக வரையறுத்தனர். இந்த இடத்தில் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முப்பது பாகையில் சூரியன் பயணிக்கும் காலத்தில் ஏற்படும் முழு நிலவு தினத்தன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அதன் பெயரையே அந்த மாதங்களின் பெயர்களாய் குறிக்கப் பெற்றன. இத்தனை தெளிவுடையவர்களுக்கு தங்களுடைய ஆண்டின் முதல் நாளினை நிர்ணயிக்கத் தெரிந்திருக்காதா? மிக நிச்சயமாக தெரிந்தேதான் தை மாதத்தின் முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக அமைத்திருந்தனர்.

அது எப்படி?

தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பிரிவாகக் கூறியிருப்பதை மேலே பார்த்தோம். அதில் இளவேனில் காலமே முதலாவதாக வருகிறது. இந்தக் காலத்தின் முதல் மாதமாக தை மாதம் இருக்கிறது. முதல் பருவ காலத்தின் முதல் மாதம் என்ற வகையில் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் மறுத்திட முடியாது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும்.

மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களை சோதிட இயலில் கர்ப்பக் காலம் என்று கூறுவர். கிராமப் புறங்களில் இதை தெப்பக் காலம் என்று இப்போதும் கூறுவதுண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் அடுத்த ஓராண்டுக்கு மழை பெய்யுமா? எப்போது பெய்யும்? எவ்வளவு பெய்யும்? என்றெல்லாம் கணிப்பார்கள். இது வேறெந்த மாதத்திலும் இல்லை. தை துவங்கி மார்கழி வரையிலான ஓராண்டிற்கு இந்தக் கணிப்பு முறை பயன்படுகிறது.

சமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்தத் தமிழ் மாதத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற சொலவடை இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. வழி பிறத்தல் எனப்து ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது.

நவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. இந்த சமயத்தில் தைத் திருநாளில் தமிழர்கள் சூரியனுக்குப் பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா, இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.

இவை தவிர தொல்காப்பியம், நற்றினை, மதுரைக்காஞ்சி போன்ற பழந்தமிழ் நூல்களிலும் இது பற்றிய குறிப்புகளை நாம் பார்க்க முடிகிறது.

 

solstice

தமிழன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன். இந்த ஆறு பருவ காலங்கள் அவன் வாழ்க்கையை ஆள்வதையே ஆண்டு என்று குறிப்பிடுகிறான். ஆறு பருவம் அவனை ஆண்டால் அதை ஒரு சுற்றாகப் பூரணமாகக் கணக்கிட்டான். இப்படித்தான் தமிழனின் ஆண்டுகள், ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது. இதை உணர்ந்து பழமையை மீட்டெடுத்து சிறப்புச் செய்வதே நாம் நம் மூதாதையர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாய் இருக்கும்.

பக்தி மார்க்கம் மற்றும் வேத மரபின் ஆதிக்கத்தினால் பழந்தமிழரின் அறிவார்த்தமான செயல்கள் காலப் போக்கில் அடியோடு அழிக்கப் பட்டு ஆரிய வைதீக கருத்தாக்கங்கள் தமிழர்களுடையதாக ஆக்கப் பட்டுவிட்டது.  பஞ்சாங்கம் பார்த்து, புராணக் கதை உருவாக்கி, தமிழ் வருடங்களுக்கு வடமொழிப் பெயர்களைச் சூட்டி சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியாகத்தான் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
– மு.சரவணக்குமார்

Leave a Reply