Shadow

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

Thamizh-Padam-2-movie-review

2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது.

இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. தேவர் மகன் கமல் ஹாசன் கெட்டப்பில் அறிமுகமாகும் ஷிவா, படத்தின் முடிவில் மீண்டும் தேவர் மகன் க்ளைமேக்ஸ்க்கே வந்துவிடுகின்றனர். இடையில், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, பிசாசு, ஸ்பீடு, டெர்மினேட்டர் என இஷ்டத்திற்கு வலம் வருகிறது.

எவ்வளவு யோசித்தாலும், முதல் பாகத்தின் காட்சிகள் எதுவும் சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது. பார்த்தோமா! சிரித்தோமோ! ஞாபகத்தில் நில்லாமல் மறைந்துவிடும். அவ்வளவுதான். பொழுதைக் கலகலப்பாகக் கழிக்க உதவும். அதற்கு மேல் எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், தெரிந்தோ தெரியாமல் படம் பெண்ணியத்தைப் பேசுகிறது. அதுவும் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளார் இயக்குநர் C.S.அமுதன். சந்தானபாரதி ஷிவாவைப் பார்த்துச் சொல்கிறார். ‘நீ ஹீரோ. நாயகிக்கு உன்னைப் பிடிக்குதோ இல்லையோ, பிடிக்கிற வரை டார்ச்சர் செய்ய எல்லா உரிமையும் நாயகனுக்கு இருக்கு’ என்கிறார். சந்தானபாரதி நர்ஸாக வந்து ரெமோவைக் கலாய்க்கும் காட்சியினும், காதலின் பெயரால் வேட்டையாடப்படும் நாயகிகளின் பரிதாப நிலையைச் சுட்டிக் காட்டும் வசனமே மிக வலிமையானது. அதற்கு மகுடம் சூட்டுவது போல், ‘எவடா உன்னைப் பெத்தா?’ எனும் பாடல், ஆதிக்க-நார்சிஸ ஆண்வயத் திரையுலகின் மீது நேரடியாக எய்யப்படும் கற்கள், அவை பகடிக்காக வைக்கப்பட்டிருந்தாலும். அதற்காக அமுதனுக்குப் பிரத்தியேக பாராட்டுகள்.! முந்தையப் பாகத்தில், திஷா பாண்டேக்குக் கிடைக்காத வாய்ப்பு, ஐஸ்வர்யா மேனனுக்கு ‘எவடா உன்ன பெத்த’ பாடல் மூலம் கிடைத்துள்ளது.

க்ளைமேக்ஸில், ஷிவா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஹை-டெசிபலில் பாடல் பாடிக் கழுத்தறுக்கிறார் நாயகி. வில்லனோடு சேர்ந்து விவேகமாய் இருக்கும் நாயகனும் கடுப்பாவது ரசிக்க வைக்கிறது. ‘நான் தனியாகப் பேசிட்டிருக்கிறதை நிறுத்தணும்’ என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனின் வாய்ஸ்-ஓவர் பாணியையும் ஓட்டியுள்ளனர். ஓரளவு சம கால விஷயங்களை ஓட்டும் பொழுது ரசிக்க முடிகிறது. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன், 94இல் வந்த ஹாலிவுட் படமான ‘ஸ்பீட்’ படக்காட்சிகளை உபயோகித்துள்ளதை ரசிக்க முடியவில்லை. ஸ்பீடுக்கும் மூன்று வருடங்களுக்கு முன், 91இல் வந்த ‘டெர்மினேட்டர் 2:ஜட்ஜ்மென்ட் டே’ படத்தையெல்லாம் தொட்டுள்ளதைத் தவிர்த்திருக்கலாம். எதை ஓட்டலாம், எப்படிக் கலாய்க்கலாம் என இன்னும் தெளிவாகத் திட்டமிட்டிருக்கலாம் அமுதன். ஸ்பூஃப் செய்யப்படுவது சமகாலத்தியவையாக இருந்தால் சுவாரசியம் கூடும்.

கமலின் தசாவதாரத்துக்குப் போகிற போக்கில் வேட்டு வைத்துள்ளனர். வில்லனான சதீஷ்க்கு எத்தனை கெட்டப்கள்! அத்தனை கெட்டப்களுமே அற்புதம் என்றாலும் கடைசி வரை அந்தப் பாத்திரம் மனதில் ஒட்டவே இல்லை. சமாதியின் மேல் சபதம், சமாதிக்கு முன் தியானம் என படம் நெடுகிலுமேயே அமுதன் அதகளம் புரிந்துள்ளார். எனினும், ஷிவாவிடம் இருக்கும் வழக்கமான எனர்ஜி லெவல் இப்படத்தில் இல்லை. கலாய்க்கும் பொழுது அவர் உதட்டில் பூத்து உறையும் புன்னகை மிஸ்ஸிங். சமீபத்தில் வந்த கலகலப்பு – 2 அளவிற்குக் கூட இப்படத்தில் ஷிவா எஞ்சாய் செய்து செய்யவில்லை என்றே தோன்றுகிறது. சமீபத்தில் வந்த எந்த மாஸ் ஹீரோ அறிமுகக் காட்சியையும் விட மிகச் சிறப்பான அறிமுகத்தை ஷிவாவிற்குக் கொடுத்துள்ளனர். அங்குத் தொடங்கும் கைத்தட்டல், படத்தின் கடைசியில் ‘இன்ஜினீயரிங் மட்டும் படிக்க வச்சிடாதீங்க’ என்ற வசனம் வரை தொடர்கிறது.