32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தடயம் விமர்சனம் | Zee 5

Dinesh R சேலம் Published: 24/02/2026 2 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 OTT
எழுத்து அளவு:

சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், தமிழக – ஆந்திர எல்லையோர ஊர் என்பதால், கொலைகாரர்கள் எல்லை தாண்டி வந்திருக்கக்கூடும் என ஆந்திராவிற்குச் சென்று விசாரிக்கின்றனர். அதே பேட்டர்னில் நடந்த 70 கொலைகளைப் பற்றித் தெரிய வருகிறது.

கொலைகாரர்கள் யார், ஏன் அத்தனை கொலை செய்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். புஷ்பா படத்தில் சுனிலின் மகனாக நடித்திருந்த ராஜ் திரன்தாஸ், இப்படத்தில் பிரதான வில்லனாகத் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அவரது மனைவியாக எழுத்தாளர் கொற்றவை நடித்துள்ளார். ஒரு பழி வாங்கும் கதையாகத் தொடங்கும் கதை, எந்தப் புள்ளியில் தொடர் சைக்கோ கொலைகளாக மாறுகிறது என்பதை இயக்குநர் தெளிவுப்படுத்தவில்லை. வசனங்களில் மட்டும், ‘காவல்துறையை அலைய விடுவதை ரசிப்போம்’ என வருகிறது. ஆனால், விஷுவலாகக் காட்டும்பொழுது, தொடர் கொலைகளை ஆந்திரப் போலிஸ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போல் காட்டப்படவில்லை. தரவுகளின்படி ஓர் ஆவணத்தன்மையோடு தொடரை இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் அணுகியுள்ளாரே அன்றி, படைப்பாளனாக இட்டு நிரப்பக் கூடிய இடத்தையெல்லாம் கடந்துவிடுகின்றனர். சைக்கோ கொலைகாரர்களால் மேலும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் தடுப்பதையே மையச்சரடாகக் கொண்டு தொடர் பயணிக்கிறது. ஆனால் முடிக்கும் பொழுது, அந்த மையச்சரடு நீர்த்துப் போகுமாறு, அதிகாரம் மையத்தின் மீதான விமர்சனமாகத் தொடரை முடித்துள்ளனர். யாரை வேண்டுமானலும் குற்றவாளிகளாக்கும் சக்தி அதிகார மையத்திற்கு ஒன்று என்ற விமர்சனம் மிக முக்கியமானதும், தொடர்ந்து அதைச் சொல்ல வேண்டியது அதி அவசியமானதுமாகும். ஆனால், அது, இத்தொடரில் இன்ஸ்டென்ட் ஆகிவிடுவதே சிறு குறை.

சமுத்திரக்கனி மிகவும் நல்லவர் என்பதைத் தொடர் முழுவதும் பலமுறை தேவைக்கு அதிகமாகவே வலியுறுத்துகின்றனர். அவரும், ‘நான் தான்டா அந்தப் பையன்’ என்பது போல், கதாபாத்திரத்தில் பொருத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் தொடரை முடித்துக் கொடுத்துள்ளார். சமுத்திரக்கனியை வியப்பதும், அவருக்குத் துணை நிற்பதுமென்ற கதாபாத்திரத்தில் ஷிவதா மிக நிறைவாகத் திரையில் வியாபித்துள்ளார்.

புலனாய்வு த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத ஒரு நல்ல தொடராகத் தடயம் அமையும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.