ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கலான் படக்குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ”தங்கலான் வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அங்கு தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது” என்றார்.
கதாசிரியரும் எழுத்தாளருமான அழகிய பெரியவன், ”தங்கலான் படத்தில் பணியாற்றியது எனக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைத் தந்தன. நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெறுவது என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ரஞ்சித் அவர்கள் வெறுப்பாற்றலின் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரைக்கும் எந்தத் திரைப்படங்களுக்கும் எதிரும் புதிருமான விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்கள் வந்ததை நான் பார்த்ததில்லை. இது ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த படைப்பு. ஏற்கெனவே இசை வெளியீட்டு விழாவில், ‘இந்தப் படம் ஒரு வரலாற்றின் முக்கியமான படம் என்று குறிப்பிட்டிருந்தேன்’. தற்போது உலகம் முழுவதிலிருந்து பலரும் தங்கலானைப் பற்றிப் பேசுகிறார்கள். இதுபோன்ற பேச்சுகளை இதற்கு முன் நான் கேட்டதில்லை. இதற்கு முழுக் காரணம் இந்தப் படத்தில் பேசப்பட்ட விசயம். அதில் காண்பிக்கப்பட்ட வரலாறுகள், குறியீடுகள். இதைக் கடந்து இந்தப் படத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், ஒரு அசலான எளிய மனிதனின் தகிக்கும் கோபம் இதில் இருக்கிறது. அந்தக் கோபம்தான் உரிமைக் குரலாக மாறி இதில் ஒலித்தது.
இந்தப் படத்தின் இயக்குநரான பா. ரஞ்சித் மீது எனக்கு எப்போதும் ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு. இதை விட பேரன்பும் உண்டு.
விக்ரம் மாபெரும் உழைப்பை இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறார். அனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.