Shadow

“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன், ”தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்குக் கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்தார்.

அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் முழுமை அடையாத முதல் பிரதியை அவர் காண்கிறார். அந்தத் தருணத்தில் என்னையும் அழைத்து இருந்தார். படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவருடைய பார்வை என்னவென்று தெரிந்து கொண்டு பேசலாம் என்று காத்திருந்தேன்.

‘ரஞ்சித் ஒரு படத்தில் பணியாற்றும் போது முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என்பது தெரியும். ஆனால் ஒரு ஹீரோ, விக்ரம் ஒரு கலைஞராக மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இதை நாம் மிகச் சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். விக்ரமின் நடிப்பு அவரின் அர்ப்பணிப்பு. இந்தப் படத்தை சரியான தேதியில் சரியாக விளம்பரப்படுத்தி வெளியிட வேண்டும். ரசிகர்களைச் சென்றடையச் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும் போது தான், ஒரு படத்திற்காக ஒரு நடிகர் அர்ப்பணிப்புடன் உழைத்ததை ஒரு தயாரிப்பாளராகக் கொண்டு போய் சேர்க்க முடியும்’ என்றார் .

இதைத் தொடர்ந்து, ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்குப் பருத்தி வீரனுக்குப் பிறகு ஒரு காவிய படைப்பு தங்கலான் தான்’ என்றும் சொன்னார்.

விக்ரம் இந்தப் படத்தின் ஜீவன். ஒரு கலைஞனாக இவ்வளவு பெரிய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

ரசிகர்கள் இயக்குநரை இயக்குநராகத்தான் பார்க்கிறார்கள். அவர் மீது அளவற்ற அன்பைச் செலுத்துகிறார்கள். பா. ரஞ்சித் சக மனிதன் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு இயக்குநர். அவருக்கு சமுதாயத்தின் மீது அக்கறையும், மக்கள் மீது அன்பும் இருக்கிறது. இதுதான் அவருடைய படத்திலும் பிரதிபலிக்கும்.

தங்கலான் திரைப்படத்திற்குத் தமிழக முழுவதும் மிகச் சிறந்த தொடக்கம் கிடைத்தது.

‘ஒரு படத்திற்காக ஒரு படக்குழு இவ்வளவு கடினமாக உழைப்பார்களா? இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பார்களா? இந்த வருடத்தில் நடிப்பிற்காக என்னென்ன விருதுகள் இருக்கிறதோ, அவை எல்லாம் விக்ரமிற்கு வழங்கிட வேண்டும். இயக்கத்திற்கு என்னென்ன விருதுகள் இருக்கிறதோ அவை எல்லாம் ரஞ்சித்திற்கு வழங்கிட வேண்டும்’ என ஆந்திராவில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளர் என்னிடம் ஆர்வத்துடன் சொன்னார்.

கடினமான விசயத்தை எடுத்துக் கொண்டு மக்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்ற படம்தான் தங்கலான். இந்தப் படத்தை காவிய படம் போல் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.