32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தங்கரதம் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 17/06/2017 2 நிமிட வாசிப்பு Updated: 12/01/2018 சினிமா
எழுத்து அளவு:

Thangaratham movie review

நாயகன் வெற்றி ஓட்டும் டெம்போ வேனின் பெயர் ‘தங்கரதம்’ என்பதே படத்தின் தலைப்பிற்குக் காரணம். ஆனாலும், டாஸ்மாக் பாரில் வரும் பாடலில், ‘தங்கரதம் போல ஸ்டீல் பாடி’ என குடிக்காரர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் புகழும் வரி ஒன்று வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கரியாம்பட்டியிலிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்குக் காய்கறிகளை இரண்டு டெம்போ வேன் கொண்டு செல்கிறது. ஒன்று, நாயகன் வெற்றியுடைய ‘தங்கரதம்’; இன்னொன்று, கதாநாயகியின் அண்ணன் செளந்தரராஜாவினுடைய ‘பரமன்’ வேன். இருவருக்குமிடையே எப்பொழுதும் பலமான தொழிற்போட்டி நிலவி வருகிறது. நாயகனுக்கோ நாயகி மீது காதல்! அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை.

மிக அழகானதொரு கதையை எடுத்தாண்டுள்ளார் இயக்குநர் பாலமுருகன். கிராமிய மனம் கமிழும் இந்த மென் காதல் கதைகளின் காலம் முடிந்து இரண்டு தசாப்தங்கள் போலாகிவிட்டது. இரண்டு மணி நேரத்திற்குக் குறைவான படமாய்க் குறைத்தும், ஒப்பேத்துவதற்கான காட்சிகளை இயக்குநரால் தவிர்க்க முடியாதது துரதிர்ஷ்டம். குறிப்பாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் லொள்ளு சபா சுவாமிநாதனும் வருகின்ற காட்சிகள் கதைக்கு உதவாததைக் குறிப்பிடலாம்.

ஸ்ட்ராபெரி படத்தில் வில்லனாகவும், எனக்குள் ஒருவன் படத்தில் துணை நடிகராகவும் நடித்த வெற்றி, இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். உயரமான அவருக்கு ஜோடியாக அதிதி கிருஷ்ணா நடித்துள்ளார். வெற்றியின் உச்சரிப்பில் ஆங்காங்கே கொஞ்சம் கன்னட நெடி அடிப்பதைத் தவிர்த்து, மிகக் கச்சிதமாகக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார். முதலில் பாசக்கார தங்கையாகவும், பின் வெற்றியின் காதலியாகப் பரிதவிப்புடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார் மலையாளத்து அதிதி. அதிதியின் அண்ணன் பரமனாக நடித்திருக்கும் செளந்தரராஜா, ‘சோலோ’வாகத் தனித்துத் தெரிவதால், சொல்லிக் கொள்ளும்படியான படமாக அவருக்கு இப்படம் அமையும்.

வெற்றியின் நண்பர் பாண்டியாக நடித்த ராண்டில்யா மனதில் பதியும்படி நடித்துள்ளார். வெள்ள புறாவாக நடித்திருக்கும் பாண்டியனை இயக்குநர் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். சென்ட்டிமென்ட்டைக் கதையோடு இயல்பாய் இழைய விட்டவாறு, நகைச்சுவையையும் சேர்த்திருந்தால் படம் பிரமாதமாய் இருந்திருக்கும்.

அண்ணாதுரை எனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன் தன் அனுபவமிக்க நடிப்பால் படத்துக்கு ஜீவனை வழங்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். நாயகனைப் பிரச்சனையில் இருந்து விடுவிக்க அவர் காட்டும் தீவிரமும் பாசமும் தான் படத்தின் அச்சாணியே! நரேன் பிரமாதப்படுத்தியுள்ளார். கதைப்படி தங்கரதத்தின் ஓனரான அவரே, படத்தின் கதையையும் இழுத்துச் செல்ல உதவியுள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.