Shadow

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

Despicable Me 3 movie review in Tamil

2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.

முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Villian League)-இல் வேலைக்குச் சேர்ந்து விடுகிறார் க்ரூ. இப்பாகத்தில், வைரத்தைத் திருட முயற்சி செய்யும் பால்துசார் பிராட்டினைப் பிடிக்காமல் கோட்டை விட்டுவிடும் க்ரூவிற்கு வேலை போய் விடுகிறது. அதனால் மினியன்ஸ் அவரை விட்டுப் போய் விடுகின்றனர். இந்தக் கடினமான சூழலை க்ரூ எப்படிச் சமாளிக்கின்றார் என்பது தான் படத்தின் கதை.

இந்தப் படத்தின் ஹைலேட்டே, க்ரூ தனது இரட்டைச் சகோதரரான ட்ரூவைச் சந்திப்பதுதான். பொன்னிறமான ட்ரூவின் தலைமுடியைக் கண்டு பொறாமைப்படும் மொட்டைத் தலையரான க்ரூ, தனது தம்பியின் உதவியோடு டான்ஸ் வில்லனான பிராட்டை எதிர்கொள்கிறார். ஹாலிவுட்டில், சிறு வயதில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றவர் பிராட். ஆனால், அவரிடம் பதின் பருவ மாற்றங்கள் தெரியத் தொடங்கியதும் அவரை ஹாலிவுட் புறக்கணிக்கிறது. அதனால் ஹாலிவுட் அமைந்திருக்கும் நிலப்பரப்பையே பலூனில் கட்டித் தனியாகப் பிரித்து அந்தரத்தில் மிதக்க விடுவதுதான் அவரது லட்சிய வஞ்சம்.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்ப்பினை அட்டகாசமாய் லோக்கலாக்கியுள்ளனர். அதற்காக ஹாலிவுட்டைக் கோலிவுட் எனச் சொல்வது ஓவரெனினும் ரசிக்க முடிகிறது. மற்ற இரண்டு பாகங்களை விடவும், இப்படம் நன்றாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். நகைச்சுவையுடன் சென்ட்டிமென்ட்டையும் சரி வரக் கலந்தது காரணமாக இருக்கலாம்.

ஆக்னஸ், மார்கோ, எடித் ஆகிய மூன்று சிறுமிகளின் மனதில் அம்மாவாக இடம்பிடிக்கத் துடிக்கும் லூசி வைல்டின் பாத்திரத்தினை அருமையாக வடிவமைத்துள்ளனர். அதே போல், சின்னஞ்சிறு ஆக்னஸ், தன் தந்தைக்கு வேலை போனது தெரிந்ததும், தன் பொம்மைகளை விற்று அவருக்கு உதவ நினைப்பது அற்புதம். காட்டிற்குச் சென்று யுனிகார்னைப் பார்க்க நினைக்கும் ஆக்னஸ், ஆட்டுக்குட்டி ஒன்றினை யுனிகார்ன் என நினைத்து வீட்டிற்குக் கொண்டு வருகிறாள். க்ரூ தர்ம சங்கடத்துடன் உண்மையை எடுத்துச் சொல்ல, “இது தான் உலகத்திலேயே சிறந்த ஆட்டுக்குட்டி” என உற்சாகமாகிறாள் ஆக்னஸ். ஏமாற்றங்களைக் குதூகலமாகக் கடக்கும் குழந்தையின் மனம் தான் எத்தனை அலாதியானது!!

டெஸ்பிக்கபிள் மீ, டெஸ்பிக்கபிள் மீ 2, மினியன்ஸ் என அனைத்துப் படங்களிலுமே, மினியன்ஸை மந்த புத்திக்காரர்களாகவே சித்தரித்து இருப்பார்கள். இப்பாகத்திலோ, அவர்களுக்குக் கோபம் வருகிறது, சிறையில் வாடும் பொழுது க்ரூவின் அன்பினை எண்ணிப் பார்க்கின்றனர். பின், திட்டம் தீட்டிச் சிறையில் இருந்து மிக டெக்னிக்கலாகத் தப்பிக்கிறார்கள். இப்பாகத்தில் தான் முதன்முறையாகச் சொதப்பாமல் மினியன்ஸ் சாகசம் புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் லட்சியத்தினை நோக்கிய பயணத்தில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வழுவாது இருக்கும் மினியன்ஸ் பெரும் ஆச்சரியத்தினைத் தருகின்றனர். அடுத்த பாகத்திற்கான கருவோடு முடியும் க்ளைமேக்ஸ், எதிர்பார்த்திட முடியாததொரு சுவாரசியம்.