
குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம்.
2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக அறிமுகமானார் டாம் ஹாலண்ட். ஜூலை 7, 2017 அன்று வெளியாகும் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ படத்தில் சோலா சூப்பர் ஹீரோவாகத் தோன்ற உள்ளார். அவரது வழிகாட்டியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேனும் படத்தில் வருகிறார். அதைப் பற்றி அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டெளனி ஜூனியர், “டோனி ஸ்பைடரை நெருக்கமாகக் கண்காணித்து, அவெஞ்சர்ஸ் டீமுக்குப் பொருத்தமான நபர் தானா என உறுதிபடுத்தணும். ஸ்பைடர் திறமையானவன். கொஞ்சம் ட்ரெயினிங் கொடுத்தால் போதும். அவெஞ்சர்ஸ் டீம்க்கு மிகவும் பக்கபலமான ஆளாக இருப்பான்” என்கிறார். சிவில் வார் படத்தில், ஸ்பைடருக்கு டோனி உருவாக்கித் தரும் ‘அயர்ன் ஸ்பைடர்’ எனும் ஹை-டெக் உடையை அணியாமல், தனது பாரம்பரியமான உடையிலேயே இப்படத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், 65 வயதாகும் சூப்பர் ஹீரோ, சூப்பர் வில்லன் அவதாரம் எடுக்கிறார் என்பதே! 1989இலும், 1992இலும் பேட் மேனாக நடித்த ‘பேர்ட் மேன் (Bird Man)’ படப் புகழ் மைக்கேல் கீட்டன், இப்படத்தில் ‘வல்ச்சர்’ எனும் பாத்திரத்தில் ஸ்பைடர்-மேனுக்கு வில்லனாகத் தோன்றுகிறார். மார்வல் காமிக்ஸின் (1963) படி, வல்ச்சர், ஸ்பைடர்-மேன் எதிர்கொள்ளும் இரண்டாவது வில்லனாவார்.
ஜார்ஜியா, நியூ யார்க், பெல்ஜியம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டது. மைக்கேல் ஜியாசினோ இசை அமைத்துள்ளார். சல்வாடோர் டோடினோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோன் வாட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். தற்போது தயாரிப்பில் இருக்கும் இதன் தொடர் படம், ஜூலை 5, 2019 அன்று வெளியாகவுள்ளது.